பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனைச்சாவடி அமைக்க இடம் தேர்வு
பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனைச்சாவடி அமைக்க இடம் தேர்வு செய்வதற்காக வருவாய் அதிகாரி ஆய்வு செய்தார்.
மேட்டுப்பாளையம்
நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு, மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் கல்லாறு தூரிப்பாலம் அருகில் ஓடந்துறை ஊராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு, ஊட்டி செல்பவர்களிடம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவின்படி, கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனைச்சாவடி அமைக்கப்பட உள்ளது. இதற்கான இடத்தை தேர்வு செய்வதற்காக மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் உள்ள வன எல்லைக்கோடு அருகில் சாலையோரத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான 2 இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வனத்துறை சார்பில் மேட்டுப்பாளையம் வனச்சரகம் எல்லைக்குள் இல்லாமல் வெளியே சோதனைச்சாவடி அமைக்க கோரிக்கை விடுத்தனர். மேலும் அப்பகுதியை சேர்ந்த நில உரிமையாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனைச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், அவர்களிடம் தாசில்தார் சந்திரன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். ஆய்வின் போது ஓடந்துறை ஊராட்சி தலைவர் தங்கவேல், காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி, வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின், சாலை ஆய்வாளர் முத்துலட்சுமி, மேட்டுப்பாளையம் நகராட்சி பொறியாளர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.