படிப்புடன் சுய ஒழுக்கத்தை கடைபிடித்தால் இலக்கை அடையலாம்


படிப்புடன் சுய ஒழுக்கத்தை கடைபிடித்தால்  இலக்கை அடையலாம்
x
தினத்தந்தி 19 Oct 2023 7:00 PM GMT (Updated: 19 Oct 2023 7:00 PM GMT)

படிப்புடன் சுய ஒழுக்கத்தை கடைபிடித்தால் இலக்கை அடைய முடியும் என்று சர்வதேச பெண் குழந்தைகள் தின விழாவில் கலெக்டர் அருணா மாணவிகளுக்கு அறிவுறுத்தினார்.

நீலகிரி

படிப்புடன் சுய ஒழுக்கத்தை கடைபிடித்தால் இலக்கை அடைய முடியும் என்று சர்வதேச பெண் குழந்தைகள் தின விழாவில் கலெக்டர் அருணா மாணவிகளுக்கு அறிவுறுத்தினார்.

குழந்தைகளுக்கு பாராட்டு

நீலகிரி மாவட்டம் ஊட்டி அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்தில் சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவை கலெக்டர் அருணா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் காப்பகத்தில் உள்ள குழந்தைகள் ஆடல், பாடல் போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். இதில் பங்கேற்ற குழந்தைகளுக்கு கலெக்டர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-

ஆண்டுதோறும் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு, மாணவிகளிடம் பல்வேறு நிகழ்ச்சிகளின் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் நீலகிரியில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் தங்கி கல்வி பயிலும் மாணவிகள் அனைவரும் நன்றாக படித்து, தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும்.

இலக்கை அடையலாம்

படித்துவிட்டு ஏதாவது ஒரு வேலைக்கு செல்லலாம் என்று நினைக்காமல், எந்த வேலைக்கு போக வேண்டும் என தீர்மானித்து விட்டு, அதனை அடைய படிப்பில் ஆர்வம் காட்ட வேண்டும். படிப்போடு சேர்த்து, தனித்திறமை, தைரியம், சுய ஒழுக்கம் ஆகியவற்றை பின்பற்றி வந்தால் வாழ்வில் நாம் நினைத்த இலக்கை அடைய முடியும். கல்வி கற்றுத்தரும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், நண்பர்கள் ஆகியோரிடம் நன் மதிப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து காப்பகத்தில் உள்ள சமையல் கூடம், விடுதி அறைகள், உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ள இருப்பு அறை ஆகியவற்றை கலெக்டர் அருணா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விழாவில் மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீணாதேவி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் (பொறுப்பு) ஷோபனா, குழந்தைகள் நலக்குழு தலைவர் ஹேமந்த ரோச், நன்னடத்தை அலுவலர் ரேணுகா, குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story