சுயமாக வேலைவாய்ப்புகளை உருவாக்கவேண்டும்
சுயமாக வேலைவாய்ப்புகளை உருவாக்கவேண்டும்
கோவை
சுயமாக வேலைவாய்ப்புகளை உருவாக்கவேண்டும் என்று நிகழ்ச்சி கலெக்டர் கிராந்தி குமார் பேசினார்.
தமிழ் கனவு
கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ்க் கனவு - தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஸ்டார்ட்-அப் தமிழ்நாடு திட்டத்தின் இயக்க இயக்குனர் சிவராஜன் ராமநாதன் விளக்கவுரை ஆற்றினார். மாவட்ட தொழில்மைய உதவி இயக்குனர் பிருந்தாதேவி ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பேசியதாவது:-
தமிழ் இணைய கல்விக் கழகம் சார்பில் தமிழ் கனவு என்ற திட்டத்தின் கீழ் தமிழ் பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில் மாவட்டம் தோறும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி, கோவை மாவட்டத்திற்கு 4 மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, கடந்த மாதம் 3-ந் தேதி கோவையில் தமிழ்கனவு நிகழ்ச்சி தொழில் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
பொருாளாதார நிலை
அதனைத்தொடர்ந்து நேற்று 2-வது நாளாக தமிழ் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கருப்பொருள் புத்தொழில் வாய்ப்புகள் ஆகும். தமிழ்நாடு பொருளாதார நிலையில் வலுவாக இருந்து வருகின்றது.
உலகத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தலைமை செயல் அலுவலர்களாக உள்ளனர்.
இந்தியாவில் உள்ள பல்வேறு முக்கிய உற்பத்தி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. சுயஉதவிக்குழுவினர் புதிய தொழில் முனைவோர்களாக உருவாகி வருகின்றனர். சுயமாக வேலைவாய்ப்புகளை உருவாக்கவேண்டும். மற்றவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கவேண்டும் என்ற நோக்கம் கொண்ட ஒவ்வொருவரும் திறமையான தொழில்முனைவோராக வரமுடியும். டெக்ஸ்டைல், என்ஜினீயரிங், தகவல்தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் கோவை மாவட்டத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுவது சிறப்பாக அமைந்துள்ளது.நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அனைத்து மாணவர்களும் இந்தவாய்ப்பை நன்கு பயன்படுத்தி கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த பொருட்கள், தொழில்முனைவோருக்கான அரசு திட்டங்கள், வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி, புத்தக கண்காட்சி, புதுமைப் பெண் திட்டம், உயர் கல்வி உதவித்திட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை திட்டங்கள், வங்கி கடன் வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு அரசின் திட்டங்கள் தொடர்பான அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.