மானிய உதவியுடன் கடன் பெற சுயஉதவி குழு உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
சுயஉதவி குழு உறுப்பினர்கள் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தி்ன் மூலம் மானிய உதவியுடன் கடன் பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சுயஉதவி குழு உறுப்பினர்கள் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தி்ன் மூலம் மானிய உதவியுடன் கடன் பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கடன் உதவி
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:- சுயஉதவி குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தொழில் தொடங்க மற்றும் செய்யும் தொழிலை விரிவுபடுத்த அரசு மானிய நிதியுடன் கூடிய வங்கி இணைப்பு தொழில் கடன் வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் காளையார்கோவில், தேவகோட்டை மற்றும் மானாமதுரை வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சுயஉதவி குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு புதிய தொழில் தொடங்கவும், செய்யும் தொழிலை விரிவுபடுத்தவும் திட்ட மதிப்பீட்டு தொகையில் 30 சதவீதம் அரசு மானிய நிதியுடன் வங்கி இணைப்புடன் தொழில் கடன் பெற்று தரப்பட்டு வருகிறது. இதில் மானியமாக ரூ.40 லட்சம் வரை பெறலாம். இதில் அனைத்து வகையான தொழில்களுக்கும் அனைத்து வகுப்பினருக்கும் கடனுதவி வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கலாம்
பயனாளிகளின் பங்களிப்பு தொகையாக திட்ட மதிப்பீட்டில் பொதுப்பிரிவினர் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 5 சதவீதமும் வங்கியில் செலுத்தி மீதமுள்ள தொகையை கடனாக பெற்று கொள்ளலாம். கல்வித்தகுதி அவசியமில்லை. கடன் பெறுவோர் வயது 21 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் சுயஉதவிகுழுவில் உறுப்பினராகவோ அல்லது சுயஉதவிகுழு உறுப்பினரின் குடும்பத்தாரராகவோ இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் சுயஉதவி குழுவில் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் மற்றும் 2 கடன் பெற்று திரும்ப செலுத்தியிருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பமுள்ளவர்கள் www.tnrtp.org/citizenlogin என்ற இணையதள முகவரியில் தங்களின் விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பத்தின் பிரதிகளை அந்தந்த ஊராட்சிகளில் உள்ள தொழில்சார் சமூக வல்லுநர்களை தொடர்பு கொண்டு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.