மூன்றாம் பாலினத்தவர்களுக்காக சுயஉதவிக்குழுக்கள் விரைவில் தொடக்கம்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு


மூன்றாம் பாலினத்தவர்களுக்காக சுயஉதவிக்குழுக்கள் விரைவில் தொடக்கம்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
x

மூன்றாம் பாலினத்தவர்களுக்காக சுயஉதவிக்குழுக்கள் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

திருச்சி

மூன்றாம் பாலினத்தவர்களுக்காக சுயஉதவிக்குழுக்கள் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத்திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் உற்பத்தியாளர்-சந்தையாளர் ஒருங்கிணைப்பு-2023 நிகழ்ச்சி திருச்சி கோர்ட்யார்ட் ஓட்டலில் நேற்று காலை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, உற்பத்தியாளர் கூட்டமைப்பின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியினை தொடங்கி வைத்து உற்பத்தி பொருட்களை பார்வையிட்டார்.

பின்னர் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மதி சிறகுகள் தொழில் மையத்தை தொடங்கி வைத்து, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் வெற்றிக்கதைகள் அடங்கிய புத்தகத்தையும் வெளியிட்டார். தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி முன்னிலையில் உற்பத்தியாளர் மற்றும் சந்தையாளர் இடையே 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறி கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

மகளிர் சுயஉதவிக்குழுக்கள்

மகளிர் சுயஉதவிக்குழுக்களை சேர்ந்த உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மற்றும் அவர்கள் தயாரிக்கும் பொருட்களை வாங்குவதற்கான சந்தைக்குழுக்களை இணைக்கும் வகையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக இந்த கூட்டம் திருச்சியில் நடப்பது பெருமையான விஷயம். நான் அமைச்சராக பொறுப்பேற்றவுடன் நான் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி திருச்சி மாவட்டம் தான்.

முதல்-அமைச்சர் தலைமையில் திருச்சிக்கு வந்து 3 லட்சத்து 72 ஆயிரத்து 424 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு, ரூ.1,756 கோடி அளவுக்கு வங்கிக்கடன் தொகைகளை வழங்கினோம். பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த மணிமேகலை விருதை ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் 33 பயனாளிகளுக்கு வழங்கினோம்.

தற்போது தமிழகத்தில் 7 லட்சத்து 22 ஆயிரம் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகிறது. 1 கோடியே 6 லட்சத்து 68 ஆயிரம் மகளிர் இந்த குழுக்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

கிராமங்களில் தொழில்புரட்சி

மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து கிராமப்புறங்களில் சத்தமில்லாத தொழில்புரட்சியை செய்து வருகிறது. மிகப்பெரிய பிராண்ட் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களின் மீது வராத நம்பிக்கை, குக்கிராமங்களில் தயாரிக்கும் மகளிர் சுயஉதவிக்குழுவினரின் பொருட்கள் மீது நம்பிக்கை வந்துள்ளது. அந்த அளவுக்கு அவர்களின் பொருட்கள் தரமாக உள்ளன.

நான் யாருக்காவது பரிசளிக்க விரும்பினால் முதலில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை தான் தேடுவேன். என்னை சந்திக்க வருபவர்களிடம் நான், பூங்கொத்துக்களை தவிர்த்து விட்டு, புத்தகங்கள் கொடுங்கள் அல்லது மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை பரிசாக கொடுங்கள் என்று தான் வலியுறுத்தி வருகிறேன்.

தொழில்முனைவோராக்க முயற்சி

விளையாட்டுத்துறை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கூட வீரர்களுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் தான் பரிசாக வழங்கப்படுகிறது. தமிழ்நாடு மகளிர் நலமேம்பாட்டு கழகத்தின் கீழ், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம் மகளிரை தொழில்முனைவோராக்கும் முயற்சியை தி.மு.க. அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் ஓரிட சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த மையங்களுக்கு மதி சிறகுகள் தொழில் மையம் என இன்று முதல் பெயர் சூட்டப்படுகிறது. விவசாய ரீதியான உற்பத்தியை மகளிர்சுயஉதவிக்குழுக்கள் மூலம் சந்தைப்படுத்துவதையும் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறோம். விவசாய உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு மட்டும் தமிழ்நாட்டில் 6 ஆயிரம் உற்பத்தியாளர் குழுக்கள் உள்ளன. விற்பனை செய்யும்போது, லாபம் ஏற்படுவதோடு, வாங்குபவர்களுக்கும் குறைந்த விலைக்கு பொருட்கள் கிடைக்கிறது என்ற திருப்தி உண்டாவது தான் இந்த நிகழ்ச்சியின் உண்மையான வெற்றி.

பூமாலை வணிக வளாகங்கள்

திராவிட மாடல் அரசு மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு எப்போதும் பக்கபலமாக, உறுதுணையாக இருக்கக்கூடிய அரசு. மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு அரசு வழங்குவது கடன்தொகை கிடையாது. தி.மு.க. அரசு அதை அப்படி பார்ப்பது கிடையாது. அது உங்கள் உழைப்பின் மீது வைத்துள்ள நம்பிக்கைத்தொகையாக தான் இந்த அரசு பார்க்கிறது.

மேலும், இ-காமர்ஸ் முறைப்படி மதி சந்தைப்படுத்தும் திட்டம் விரைவில் தொடங்க உள்ளோம். பூமாலை வணிக வளாகங்களை விரைவில் முதல்-அமைச்சர் திறக்க உள்ளார். மூன்றாம் பாலினத்தவர்களுக்கு என்று தனியாக சுயஉதவிக்குழுக்களை தொடங்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல்-அமைச்சரின் அறிவுறுத்தல்படி, விரைவில் அதையும் நாங்கள் தொடங்குவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், "வாழ்ந்து காட்டுவோம் என்கிற திட்டம் கடந்த 2006-ம் ஆண்டு உலக வங்கியின் உதவியோடு, ரூ.717 கோடி நிதியை பெற்று, 4 ஆண்டுகளில் அதற்கான இலக்கு எட்டப்பட்டது. இதையடுத்து உலக வங்கி இந்த திட்டத்தை விரிவுபடுத்துவோம் என்று கூறியது. நிலையான வருமானம் வர வேண்டும் என்பதற்காக தான் இந்த வாழ்ந்துகாட்டுவோம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது'' என்றார்.

நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு முதன்மை செயலாளர் செந்தில்குமார், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் முதன்மை செயல் அலுவலர் திவ்யதர்ஷினி, மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆணையர் வைத்திநாதன், வாழ்ந்து காட்டுவோம் திட்ட முதன்மை செயலாக்க அலுவலர் பத்மஜா, எம்.எல்.ஏ.க்கள் சவுந்திரபாண்டியன், ஸ்டாலின்குமார், தியாகராஜன், பழனியாண்டி, இனிகோ இருதயராஜ், கதிரவன், மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story