4 கிலோ தக்காளி ரூ.50-க்கு விற்பனை


4 கிலோ தக்காளி ரூ.50-க்கு விற்பனை
x

திருச்சியில் தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை சரிந்து, 4 கிலோ ரூ.50-க்கு விற்பனை ஆனதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருச்சி

திருச்சியில் தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை சரிந்து, 4 கிலோ ரூ.50-க்கு விற்பனை ஆனதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உச்சம் தொட்ட தக்காளி விலை

இந்தியாவில் தக்காளி விலை கிலோவுக்கு சுமார் ரூ.300 என்ற உச்சத்தை எட்டிய பின்னர் தற்போது அதன் விலை படிப்படியாக குறைய தொடங்கியது. திருச்சி காந்திமார்க்கெட்டில் கடந்த மாதம் ஒரு பெட்டி (25 கிலோ) தக்காளி அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை விற்பனை ஆனது.

இந்தநிலையில் தற்போது வரத்து அதிகரிப்பால் அதன் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. தரத்தை பொறுத்து ஒரு பெட்டி தக்காளி ரூ.350 முதல் ரூ.400 வரை நேற்று விற்பனையானது. மொத்த விலையில் ஒரு கிலோ ரூ.14, 16-க்கு வாங்கி, வியாபாரிகள் வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்கின்றனர்.

4 கிலோ ரூ.50

இன்னும் வரத்து அதிகரித்தால் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறினர். தக்காளி விலை சரிந்தது இல்லத்தரசிகளை மகிழ்ச்சி படுத்தினாலும், விவசாயிகளை கவலை அடைய செய்துள்ளது. இதற்கு வியாபாரிகள் தக்காளியின் கொள்முதல் விலையை கடுமையாக குறைத்துவிட்டதே காரணம்.

இதனால், திருச்சி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள தக்காளி விவசாயிகள் பாதிப்பில் இருந்து தப்பிக்க, தக்காளியை வண்டிகளில் கொட்டி 4 கிலோ ரூ.50 என்று நேரடியாக விற்பனை செய்து வருகிறார்கள். திருச்சி மாநகரில் கடந்த இரு நாட்களாக இதுபோன்ற தக்காளி வண்டிகளை ஆங்காங்கே காண முடிந்தது. பொதுமக்கள் போட்டி போட்டு தக்காளியை வாங்கிச்சென்றதை காணமுடிந்தது.

மேலும் சரிய வாய்ப்பு

இதுகுறித்து விவசாயிகள் கூறும் போது, தக்காளியின் உற்பத்தி செலவே ஒரு கிலோவுக்கு சுமார் ரூ.10 முதல் ரூ.12 வரை ஆகிறது. ஆனால் வியாபாரிகள் கிலோ ரூ.5 முதல் ரூ.7 வரை தான் வாங்கிச்செல்கிறார்கள். இதனால் நாங்களே வாடகை வண்டியை பிடித்து தெருவில் வைத்து 4 கிலோ ரூ.50-க்கு விற்கிறோம் என்றனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, அண்டை நாடான நேபாளத்தில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யப்பட்டதால், வட மாநிலங்களில் தேவை குறைந்துவிட்டது. இதனால் தமிழகத்துக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தான் திடீர் விலை சரிவுக்கு காரணம். வரும் நாட்களில் மேலும் குறைய வாய்ப்புள்ளது என்றனர்.

திட்டமிட்டு சாகுபடி

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, தக்காளி பயிரிடும் விவசாயிகள் தங்கள் இஷ்டத்துக்கு பயிரிடுவதே விலை உயர்வுக்கும், விலை சரிவுக்கும் காரணம். தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் விவசாயிகளை ஒருங்கிணைத்து நாள் ஒன்றுக்கு எவ்வளவு டன் தக்காளி தேவை என்பதை கருதி முன்கூட்டியே திட்டமிட்டு விவசாயிகளை சாகுபடி செய்ய அறிவுரை வழங்க வேண்டும். அவ்வாறு செய்தால், இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. தக்காளி விலை சரிவை சந்திக்காது. விலை உயரவும் செய்யாது என்றனர்.


Next Story