லோடு வேன்களில் 6 கிலோ ரூ.100-க்கு பெரிய வெங்காயம் விற்பனை


லோடு வேன்களில் 6 கிலோ ரூ.100-க்கு பெரிய வெங்காயம் விற்பனை
x

லோடு வேன்களில் 6 கிலோ ரூ.100-க்கு பெரிய வெங்காயம் விற்பனை

தஞ்சாவூர்

தஞ்சையில் பெரியவெங்காயம் லோடு வேன்களில் 6 கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சமையலில் வெங்காயம்

சமையல் என்றாலே அதில் பிரதானமாக இடம்பெறும் காய்கறி என்றால் அது வெங்காயம் தான். சட்னி, சாம்பார், கூட்டு, பொறியல், அவியல் என என்ன உணவாக இருந்தாலும், உணவின் சுவையை கூட்டுவதே வெங்காயத்தின் சிறப்பு. என்னதான் மணக்க மணக்க பிரியாணி இருந்தாலும் தொட்டுக்க வைக்கப்படும் தயிர் வெங்காயம் தான் உணவையே சிறக்க செய்யும்.

இப்படி சிறப்புமிக்க வெங்காயம் அவ்வப்போது விலை உயர்ந்து மலைக்க வைக்கும். பின்னர் திடீரென விலை சரிந்து வியக்க வைக்கும். அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை வெங்காயத்தின் விலை கணிசமாக குறைந்து இருந்தது.

விலை உயரும் வெங்காயம்

தற்போது வெங்காயத்தின் விலை கொஞ்சம் உயர தொடங்கி இருக்கிறது. தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் கடந்த வாரம் ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனையான பெரிய வெங்காயம், தற்போது ரூ.25-க்கு (மொத்த விலையில்) விற்பனையாகி வருகிறது. சில்லறை வியாபாரத்தை பொறுத்தவரையில் ரூ.30-க்கு வெங்காயம் விற்பனை ஆகிறது.

வெளிசந்தைகளில் இதை விட கூடுதலாக விற்பனை ஆகிறது. தெருக்களில், நடமாடும் தள்ளுவண்டி, லோடு ஆட்டோக்களில் 6 கிலோ ரூ.100-க்கு என கூவி கூவி விற்பனை செய்யும் நிலைமை இருக்கிறது. முன்பெல்லாம் ஓட்டலில் பிரைட் ரைஸ் போன்ற உணவுகளிலும், ஆம்லெட்களிலும் வெங்காயத்துடன் முட்டைகோசை கலந்து கொடுப்பார்கள். கேட்டால், 'என்ன பண்றது விலை கட்டுப்படியாகவில்லை' என்பார்கள். இப்போதெல்லாம் புரோட்டாவுக்கு கூட தஞ்சையில் தயிர் வெங்காயம் கொடுக்கிறார்கள்.

உயரும்

இதுகுறித்து தஞ்சை காமராஜர் மார்க்கெட் வெங்காயம் மொத்த வியாபாரிகள் கூறியதாவது:-

தஞ்சை மார்க்கெட்டுக்கு மராட்டியம், கர்நாடகம், ஆந்திரா, உத்தரபிரதேசம் பகுதிகளில் இருந்து பெரிய வெங்காயம் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. தற்போது அந்த பகுதிகளில் நல்ல விளைச்சல் இருந்தாலும் அங்கு பெய்து வரும் தொடர் மழையால், 60 முதல் 70 சதவீதம் வரை சுமாரான சரக்கு தான் வருகிறது. தரமான வெங்காயம் வரத்து குறைவாகவே இருக்கிறது.

கடந்த சில நாட்களாக இந்த ரக வெங்காயங்களே அதிகளவில் மார்க்கெட்டிலும், வெளிச்சந்தைகளிலும் வெகுவாக விற்பனையாகிறது. இன்னும் 2 மாதங்களுக்கு வெங்காயத்தின் விலை அதிகமாக தான் இருக்கும். பொதுவாக அரியலூர், பெரம்பலூர், பொள்ளாச்சி, தென்காசி, மைசூர் போன்ற பகுதிகளில் இருந்து சின்னவெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.

ஆனால் தற்போது மைசூரில் சீசன் முடிந்துவிட்டது. அரியலூர், பெரம்பலூரில் இருப்பு வைக்கப்பட்ட சின்ன வெங்காயம் தான் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இதனால் சின்னவெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. சின்னவெங்காயம் கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

உழவர் சந்தை

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள உழவர் சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.20-க்கு விற்பனையானது. சின்னவெங்காயம் கிலோ ரூ.46 முதல் ரூ.60 வரை விற்பனையானது. தஞ்சை தொம்பன்குடிசை, புதுக்கோட்டை சாலை, கீழவாசல் போன்ற பகுதிகளில் லோடு வேன்களில் பெரியவெங்காயத்தை குவித்து வைத்து 6 கிலோ ரூ.100 என கூவி, கூவி விற்பனை செய்யப்பட்டது.


Next Story