ரூ.81 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை


ரூ.81 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை
x
தினத்தந்தி 14 March 2023 12:30 AM IST (Updated: 14 March 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தேனி புத்தக திருவிழாவில் ரூ.81 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் ஷஜீவனா கூறினார்.

தேனி

தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முதல் புத்தகத் திருவிழா பழனிசெட்டிபட்டியில் கடந்த 3-ந்தேதி தொடங்கி 11 நாட்கள் நடந்தன. நேற்று நிறைவு விழா நடந்தது. விழாவில் கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி, புத்தகத் திருவிழா நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்திய அரசு துறை அலுவலர்கள் மற்றும் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி நிர்வாகத்துக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசினார். அவர் பேசும்போது, "தேனி புத்தகத் திருவிழாவில் 1½ லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, தினந்தோறும் நடத்தப்பட்ட மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், முக்கிய பிரமுகர்களின் சிறப்புரைகள் மற்றும் பட்டிமன்ற நிகழ்வுகளை பார்வையிட்டு புத்தங்களைச் வாங்கிச் சென்றனர். அதனடிப்படையில், புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகளின் மூலம் ரூ.81 லட்சத்து 6 ஆயிரத்துக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.22 ஆயிரத்து 500 மதிப்பிலான 4,394 புத்தகங்கள் சிறைத்துறைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் பயிலுகின்ற 11 ஆயிரத்து 500 மாணவ, மாணவிகளுக்கு கூப்பன்கள் வழங்கப்பட்டு, புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இப்புத்தகத் திருவிழாவில் பராம்பரிய உணவகங்கள் அமைக்கப்பட்டு, ரூ.2 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பிலான உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது" என்றார்.

விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகன், பெரியகுளம் ஆர்.டி.ஓ. சிந்து, உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. பால்பாண்டி, மாவட்ட நூலக அலுவலர் ஆண்டாள், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி, துணைத்தலைவர் மணிமாறன் மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story