கோவையில் மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை


கோவையில் மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை
x
தினத்தந்தி 15 Jan 2023 12:15 AM IST (Updated: 15 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை

கோயம்புத்தூர்

சாய்பாபாகாலனி

கோவையில் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்த எஸ்.என்.எஸ். கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

போதை மருந்து பழக்கம்

கோவை மாநகர பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் போதை மருந்து பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து உள்ளது. எனவே அவர்களுக்கு இந்த மருந்துகள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

அத்துடன் டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் யாருக்கும் மருந்து கடைகளில் யாருக்கும் மாத்திரைகள் விற்பனை செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அத்துடன் இது தொடர்பாகவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

3 பேரை பிடித்து விசாரணை

இந்த நிலையில் சாய்பாபாகாலனி பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் ரோந்து சென்றனர். அவர்கள் அங்குள்ள அழகேசன் சாலையில் உள்ள ஒரு டீக்கடை அருகே வந்தபோது, அங்கு 3 பேர் நின்றிருந்தனர்.

உடனே சந்தேகம் அடைந்த போலீசார் அந்த 3 பேரையும் பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதிலை தெரிவித்தனர். இதையடுத்து 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

எஸ்.என்.எஸ். கல்லூரி மாணவர்

அதில் அவர்கள், கோவை வெங்கிட்டாபுரம் நேதாஜி காலனியை சேர்ந்த சஞ்செய் (வயது 19), ஓட்டல் தொழிலாளியான கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ஜானகி ராமன் (26), கட்டிட தொழிலாளியான கணபதியை சேர்ந்த செல்வகுமார் (27) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், ஜானகிராமன், செல்வகுமார் ஆகியோர் ஆன்லைனில் வலிநிவாரணிக்கு பயன்படுத்தும் மாத்திரைகளை (போதை மாத்திரைகள்) ஆர்டர் செய்து கோவை சரவணம்பட்டியில் உள்ள எஸ்.என்.எஸ். கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.எஸ்.சி. ஐ.டி படித்து வரும் சஞ்செயிடம் கொடுத்து உள்ளனர்.

மாணவர்களுக்கு விற்பனை

அதை அவர் தன்னுடன் படித்து வரும் சக மாணவர்கள் மற்றும் பிற மாணவர்களுக்கு விற்பனை செய்து உள்ளார். அதுபோன்று இந்த மாத்திரையை தண்ணீரில் கலந்து அதை ஊசி மூலம் உடலிலும் ஏற்றி உள்ளனர். இந்த ஒரு ஊசியை ரூ.300 முதல் ரூ.400 வரை சஞ்செய், தன்னுடன் படித்து வரும் எஸ்.என்.எஸ். கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 200 போதை மாத்திரைகள், ரூ.37 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு ஸ்கூட்டி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் அந்த 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

புகார் தெரிவிக்கலாம்

கோவை மாநகர பகுதியில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் சில மாணவர்கள் வலிநிவாரணிக்காக பயன்படுத்தும் மாத்திரைகளை வாங்கி அதை போதைக்காக பயன்படுத்தி வருகிறார்கள். எனவே இது தொடர்பாக மருந்து கடைகளுக்கு அறிவுறுத்தி இருப்பதால் டாக்டர்களின் அனுமதி சீட்டு இல்லாமல் யாரும் மருந்துகளை கொடுப்பது இல்லை.

இதனால் எஸ்.என்.எஸ். கல்லூரி மாணவர் சஞ்செய் உள்பட 3 பேரும் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கி சப்ளை செய்து உள்ளனர். இதுபோன்ற செயல்களையும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கல்லூரிகளில் இதுபோன்று போதை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தால் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

-------------------------------------------------------


Next Story