மகாளய அமாவாசையையொட்டிஉழவர் சந்தைகளில் ரூ.91 லட்சத்துக்கு காய்கறி விற்பனை


மகாளய அமாவாசையையொட்டிஉழவர் சந்தைகளில் ரூ.91 லட்சத்துக்கு காய்கறி விற்பனை
x

மகாளய அமாவாசையையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் ரூ.91 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டன.

சேலம்

சேலம்

மகாளய அமாவாசையையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் ரூ.91 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டன.

மகாளய அமாவாசை

சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, தாதகாப்பட்டி, ஆட்டையாம்பட்டி, ஆத்தூர், மேட்டூர், தம்மம்பட்டி, ஜலகண்டாபுரம், இளம்பிள்ளை, எடப்பாடி என 11 இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன. இந்த சந்தைகளுக்கு விவசாயிகள் தங்கள் காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று மகாளய அமாவாசை மற்றும் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி உழவர் சந்தைகளில் காய்கறி வாங்குவோரின் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக சந்தையில் அகத்திக்கீரை, வாழை இலை, வாழைப்பழம், கத்தரிக்காய், அவரைக்காய், பூசணிக்காய், வெள்ளை பூசணிக்காய் போன்றவைகள் அதிக அளவில் விற்பனையானது.

ரூ.91 லட்சத்துக்கு விற்பனை

இதுகுறித்து வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை அதிகாரிகள் கூறும் போது, 'மகாளய அமாவாசை மற்றும் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளுக்கு 947 விவசாயிகள் 270 டன் காய்கறி மற்றும் பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இவை ரூ.91 லட்சத்து 20 ஆயிரத்து 40-க்கு விற்பனை ஆனது. இந்த காய்கறிகளை 66 ஆயிரத்து 927 நுகர்வோர்கள் வாங்கி சென்றனர் என்றனர்.

இதேபோல் சேலம் பால் மார்க்கெட், ஆற்றோர மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து மார்க்கெட்டுகளிலும் நேற்று காய்கறி, பழங்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.


Next Story