செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. சகோதரர் மறைவு: உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி
செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. சகோதரர் மறைவுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ.வும் காங்கிரஸ் கட்சி் சட்டமன்ற குழு தலைவருமான செல்வப்பெருந்தகையின் சகோதரர் ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் காலமானார். இவரது உடல் காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மணிமங்கலம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மணிமங்கலம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் ராதாகிருஷ்ணன் குடும்பத்திற்கும், எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகைக்கும் ஆறுதல் கூறினார்.
அவருடன், அமைச்சர் தா.மோ அன்பரசனும் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன், மணிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அய்யப்பன், ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.