மகளிருக்கான திறன் மேம்பாட்டு கருத்தரங்கு


மகளிருக்கான திறன் மேம்பாட்டு கருத்தரங்கு
x
தினத்தந்தி 26 Nov 2022 12:15 AM IST (Updated: 26 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தளி கொய்மலர் மகத்துவ மையத்தில் பன்னாட்டு அளவிலான மகளிருக்கான திறன் மேம்பாட்டு கருத்தரங்கை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தளி கொய்மலர் மகத்துவ மையத்தில் பன்னாட்டு அளவிலான மகளிருக்கான திறன் மேம்பாட்டு கருத்தரங்கை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

கருத்தரங்கு

கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் இந்திய-இஸ்ரேல் வேளாண்மை திட்டத்தின் கீழ் கொய்மலர் மகத்துவ மையத்தில் பன்னாட்டு அளவில் மகளிருக்கான திறன் மேம்பாட்டு கருத்தரங்கு நடைபெற்றது. தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கருத்தரங்கை தொடங்கி வைத்தனர். தூதரக பொது அலுவலர் யார் யசேல், இஸ்ரேல் நாட்டிற்கான தென்னிந்திய தூதர் டேம்மி பென் ஹெய்ம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக தேவகானப்பள்ளியில் தக்காளி, கேரட் நடவு பணிகளையும், பசுமை குடிலில் ரோஜா பூக்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதை அமைச்சர் பார்வையிட்டார். அமைச்சருடன் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, தோட்டகலைத்துறை இயக்குனர் பிருந்தாதேவி, எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ் (ஓசூர்), டி.மதியழகன் (பர்கூர்), டி.ராமச்சந்திரன் (தளி), ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

கண்காட்சி

மேலும், தோட்டக்கலைத்துறை மூலம் பனை மற்றும் தென்னை சார்ந்த தொழில்நுட்ப கருவிகள், கைவினை பொருட்கள், தோட்டக்கலை பயிர்கள் சாகுபடிக்கு தேவையான எந்திரங்கள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயிரிடப்பட்ட பல்வேறு வகையான மலர்களால் அமைக்கப்பட்ட கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

பின்னர் அமைச்சர் பேசியதாவது:-

தளி கொய்மலர் மகத்துவ மையத்தில் இந்திய இஸ்ரேலின் 30 ஆண்டுகால நட்புறவை சிறப்பிக்கும் பொருட்டு தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக 2 நாட்கள் பன்னாட்டு அளவில் மகளிர்க்கான திறன் மேம்பாட்டு கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு மற்றும் பல்வேறு வெளி மாநிலங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண் தோட்டக்கலை அலுவலர்கள் கலந்து கொண்டு இஸ்ரேல் வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து அறிந்து கொள்ள உள்ளனர்.

எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை

தமிழகத்தில் தோட்டக்கலைத்துறையில் இஸ்ரேல் நாட்டு முறையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொய்மலர், காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டு அதிகளவில் லாபம் ஈட்டப்படுகிறது. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி பயிர்கள், பூக்கள், காய்கறிகள் ஆகியவற்றை பயிர் செய்வதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த மையத்தில் தற்போது 1 ஆண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பூங்கா பராமரிப்பு, தோட்டம் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அதிக அளவு வாய்ப்புகள் இருப்பதால் கூடுதலாக 6 மாத காலம் பயிற்சி அளிக்க வேண்டும் என எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபோன்ற குறுகிய கால பயிற்சி அளிப்பது குறித்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

கால நீடிப்பு

முதல்-அமைச்சரின் முயற்சியின் அடிப்படையில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு 2,28,000 (20 சதவிகிதம்) விவசாயிகள் இணைந்துள்ளனர். பயிர் காப்பீடு செய்ய கால நீடிப்பு செய்யப்பட்டதில் 33,265 விவசாயிகள் குறுகிய காலத்தில் பதிவு செய்துள்ளனர். எனவே, விவசாயிகள் தமிழ்நாடு அரசு மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை பயன்படுத்தி கொண்டு விவசாயத்தில் அதிக லாபம் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. முருகன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் பூபதி, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் முகமது அஸ்லாம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி மற்றும்அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story