சர்வதேச கருத்தரங்கம்
சர்வதேச கருத்தரங்கம் நடந்தது
காரைக்குடி
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலை நிலைக் கல்வி இயக்கக கல்வியியல் துறை மற்றும் வரலாற்று துறை இணைந்து இந்திய பண்பாடு, மரபுகோவில், கட்டிடக்கலை போன்றவற்றை மீட்டெடுத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லுதல் என்ற தலைப்பிலான சர்வதேச கருத்தரங்கினை நடத்தியது. இதன் தொடக்க விழா நடைபெற்றது. அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவி தலைமை தாங்கினார். பேராசிரியர் சிவகுமார் வரவேற்றார். திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், நமது மரபுகளை நாம் இழந்துவிட்ட நிலையில் அதனை மீட்டெடுப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். நம்முடைய கலைகள் நமது மண்ணிற்கு ஏற்ப பல்வேறு பரிமாணங்களை பெற்று விளங்குகிறது. நாம் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளும், வேளாண் பொருட்களும் இன்று பல்வேறு உலக நாடுகள் தங்கள் கண்டுபிடிப்புக்களாக கூறி தன்னுரிமை பெற்றுள்ளன. நமது முந்தைய தலைமுறைகள் எவ்வாறு வாழ்ந்தனர் என்பதை கூட நாம் அறியாமல் உள்ளது வருத்தமளிக்கிறது. மாணவர்கள் நமது பண்பாட்டு கூறுகளை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள் என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாநில திட்டக்குழு உறுப்பினர் சீனிவாசன், சிங்கப்பூர் தேசிய கல்வி நிறுவனத்தின் ஆசிய மொழிகள் மற்றும் பண்பாட்டு துறை பேராசிரியர் சீதாலட்சுமி, சென்னை பல்கலைக்கழக இந்திய வரலாற்று துறை பேராசிரியர் சுந்தரம், இந்து சமய அறநிலையத்துறை தொல்லியல் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ராஜவேல் பேசினர். இதையொட்டி இந்திய தொல்லியல் துறை கோவில் பிரிவு ஏற்பாடு செய்திருந்த ஒளிப்பட கண்காட்சியினை அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவி திறந்து வைத்தார். கருத்தரங்கில் கலந்து கொண்ட ஆராய்ச்சியாளர்கள் சமர்ப்பித்த கட்டுரை தொகுப்பினை துணை வேந்தர் ரவி வெளியிட சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக்கொண்டனர்.