தொழிற்சாலை பாதுகாப்பில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம்


தொழிற்சாலை பாதுகாப்பில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம்
x

தொழிற்சாலை பாதுகாப்பில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

திருச்சி

தமிழக அரசின் தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் மற்றும் தேசிய பாதுகாப்பு குழுமம், திருச்சி மண்டல பிரிவு சார்பாக தொழிற்சாலை பாதுகாப்பில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் என்ற தலைப்பில் பாதுகாப்பு கருத்தரங்கம் நேற்று திருச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றது. இதில் திருச்சி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் மாலதி வரவேற்றார். தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனரும், தேசிய பாதுகாப்பு குழுமத்தின் தமிழ்நாடு பிரிவின் தலைவருமான செந்தில்குமார் தலைமை தாங்கி பேசும்போது, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்டு தொழிற்சாலைகளில் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். தொழிற்சாலை நிர்வாகத்தினர் அதை உறுதி செய்ய வேண்டும் என்றார். கருத்தரங்கில் பயிற்சி முகாமின் நோக்கத்தையும் அதன் முக்கியத்துவத்தையும், தொழிற்சாலைகளில் பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளையும் தொழிற்சாலைகளில் முன்னேறிவரும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பாதுகாப்பை உறுதி செய்வது பற்றியும், தொழிற்சாலை பாதுகாப்பில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது பற்றியும், ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி பாதுகாப்பை மேம்படுத்துதல் பற்றியும், சிறந்த பாதுகாப்பு வழிமுறைகளை பயன்படுத்தி தீங்கில்லா சூழ்நிலையை உருவாக்குதல் பற்றியும், தொழிற்சாலையில் காசநோய் பரவாமல் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இதில் திருச்சி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குனர் சித்தார்த்தன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் மண்டலத்தின் மேலாண்மை இயக்குனர் ராஜ்மோகன், தமிழ்நாடு தேசிய பாதுகாப்பு குழுமம் செயலாளர் ராஜ்மோகன், சீவைஸ். ஏ.ஐ. இணை நிறுவனர் பாலாஜி, கருடா ஏரோஸ்பேஸ் செயல் தலைவர் விஜயகுமார், புங்கே இந்தியா துணை பொது மேலாளர் ரபீக் அலி, திண்டுக்கல் இணை இயக்குனர் சங்கர், தஞ்சை இணை இயக்குனர் பூங்குழலி, தேசிய பாதுகாப்பு குழும திருச்சி மண்டல பிரிவு உறுப்பினர்கள் மற்றும் திருச்சி மண்டலத்திற்குட்பட்ட தொழிற்சாலை தலைவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதில் திருச்சி மண்டலத்திற்குட்பட்ட 13 மாவட்டங்களைச் சேர்ந்த 450-க்கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகளுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.


Next Story