தோட்டக்கலை வாரியத்தின் மானிய திட்டங்கள் குறித்து கருத்தரங்கம்
கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலை வாரியத்தின் மானிய திட்டங்கள் குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது.
வடவள்ளி
கோவை வேளாண்மை பல்கலைக்கழக தோட்டக்கலை கல்லூரியில் தேசிய தோட்டக்கலை வாரியத்தின் மானிய திட்டங்கள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் துணை வேந்தர் கீதாலட்சுமி தலைமை தாங்கி, தேசிய தோட்டக்கலை வாரிய திட்டங்கள் பற்றிய படிப்பிதழ்களை வெளியிட்டார். தொடர்ந்து அவர் பேசும்போது, தோட்டக்கலைப் பயிர்களை திறந்தவெளியில் பயிரிடச் செய்வதன் மூலம் வணிக ரீதியில் விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவர். இத்திட்டத்தில் குறைந்தது 5 ஏக்கருக்கு மேல் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்யவேண்டும். இதில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மொத்த திட்டமதிப்பில் 40 விழுக்காடு மானியம் வழங்கப்படுகிறது.
இதில் வாழை, தென்னை, எலுமிச்சை, திராட்சை, சீதாபழம், கொய்யா, மா, பப்பாளி உள்ளிட்ட பல பயிர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அதன் திட்ட மதிப்பீட்டில் அதிகளவாக ரூ.30 லட்சம் வரை மானியம் கிடைக்கும். மேலும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பசுமைக்குடில் முறையில் உயர் மதிப்பிலான தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் அரசு மானியம் வழங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வர் ஐரின் வேதமணி வரவேற்றார். தேசிய தோட்டக்கலை வாரியத்தின் துணை இயக்குநர் ராஜா, வேளாண்மை இணை இயக்குனர் முத்துலட்சுமி, நபார்டு மேலாளர் திருமலை ராவ், ஹரிப்பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.