அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு:அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு ஏற்பு; 9-ந் தேதி எதிர்தரப்பினர் ஆட்சேபனை தெரிவிக்கலாம் என கோர்ட்டு உத்தரவு


அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு:அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு ஏற்பு;   9-ந் தேதி எதிர்தரப்பினர் ஆட்சேபனை தெரிவிக்கலாம் என கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 4 Oct 2023 12:15 AM IST (Updated: 4 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு ஏற்கப்பட்டது. இம்மனு மீது 9-ந் தேதி எதிர்தரப்பினர் ஆட்சேபனை தெரிவிக்கலாம் என விழுப்புரம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம்


செம்மண் குவாரி வழக்கு

தமிழ்நாட்டில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சிக்காலம் நடந்தது. அப்போது விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாக புகார் எழுந்தது. அதாவது அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததால் அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.

4 பேர் ஆஜர்

இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கோதகுமார், ஜெயச்சந்திரன், சதானந்தன், கோபிநாத் ஆகிய 4 பேர் மட்டும் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன் ஆகிய 3 பேரும் ஆஜராகவில்லை.

மேலும் இவ்வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 11 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். அவர்களில் 9 பேர் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளதால் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், முன்னாள் அரசு வக்கீல் சீனிவாசன் மூலமாக கடந்த மாதம் 8-ந் தேதியன்று விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அம்மனுவில், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராக அரசு பணியில் இருக்கும் அதிகாரிகள் எப்படி சாட்சியம் அளிக்க முடியும்? எனவே அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு தங்களை அனுமதிக்கக்கோரி அம்மனுவில் கூறியிருந்தார்.

ஜெயக்குமாரின் மனு ஏற்பு

இம்மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது ஜெயக்குமார் குற்றம் சாட்டியவாறு போதிய முகாந்திரம் இருப்பதால் மனுவை நீதிபதி பூர்ணிமா ஏற்றுக்கொண்டார். மேலும் இம்மனு மீது ஆட்சேபனை ஏதும் இருந்தால் அதனை தெரிவிக்க எதிர்தரப்புக்கு காலஅவகாசம் வழங்கி வருகிற 9-ந் தேதி இவ்வழக்கு விசாரணையை நீதிபதி பூர்ணிமா ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


Next Story