செங்குந்தர் மாரியம்மன் கோவில் தேரோட்டம்
சேலம் அம்மாப்பேட்டையில் செங்குந்தர் மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆடித்திருவிழா
சேலம் மாநகரில் உள்ள மாரியம்மன், காளியம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. குறிப்பாக பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று 2-வது நாளாக பக்தர்கள் பொங்கல் வைக்கும் வைபவம் நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து காலை முதல் இரவு வரையில் விடிய, விடிய ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து அதனை அம்மனுக்கு படைத்து வழிபாடுநடத்தினர்.
மேலும் சிலர் அம்மனுக்கு கூழ் காய்ச்சி படையலிட்டு அதை பொதுமக்களுக்கு வழங்கினர். கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு அவர்களை ஒழுங்குப்படுத்தினர். இருப்பினும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர்.
தேரோட்டம்
சேலம் அம்மாப்பேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி உற்சவர் அம்மன் தங்ககவசத்தில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனை தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக வந்த தேரை ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து சென்றனர். தேரோட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஆடித்திருவிழாவின் முக்கிய நிகழ்வான வண்டி வேடிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) இரவு நடைபெறுகிறது. இதில் விரதம் இருக்கும் பக்தர்கள் பல்வேறு கடவுள் வேடமணிந்து வண்டியில் அமர்ந்து ஊர்வலமாக வலம் வருவார்கள்.
இதேபோல் அம்மாப்பேட்டை பலப்பட்டரை மாரியம்மன், செவ்வாய்பேட்டை மாரியம்மன், குகை மாரியம்மன், காளியம்மன், சின்னக்கடைவீதி மாரியம்மன், சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன், காளியம்மன், களரம்பட்டி புத்துமாரியம்மன் உள்பட மாநகரில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களிலும் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது.