சேலத்தில் கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்


சேலத்தில் கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்
x

எனது மகளின் காதல் திருமணத்துக்கு உதவியதால் அண்ணியை கழுத்தறுத்து கொன்றேன் என்று கைதான தொழிலாளி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

சேலம்

பெண் கொலை

சேலம் கன்னங்குறிச்சி அருகே உள்ள பெரிய கொல்லப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மனைவி சாந்தி (வயது 40). குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். சாந்தி அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். மேலும் அவர் பா.ஜனதா கட்சியில் மகளிரணி மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்தார்.

அஸ்தம்பட்டி பகுதியில் கண்ணனின் தம்பி கருணாநிதி (45) குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் சலூன் கடை வைத்துள்ளார். இந்த நிலையில் கருணாநிதியின் மகள் ராஜேஸ்வரி தான் காதலித்து வந்த மோகன்லால் என்ற வாலிபரை கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

அவர்களின் திருமணத்துக்கு கண்ணனின் மனைவி சாந்தி உதவியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த கருணாநிதி கடந்த 17-ந் தேதி சாந்தி வீட்டுக்கு சென்று அவரை கழுத்தறுத்து கொலை செய்தார்.

பரபரப்பு வாக்குமூலம்

இந்த கொலை தொடர்பாக அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கருணாநிதியை விரைவில் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவரை பல்வேறு இடங்களில் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் தாரமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த கருணாநிதியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் போலீசாரிடம் கருணாநிதி பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது:-

எனது மகள் காதல் திருமணம் செய்து கொண்ட விவகாரத்தில் அண்ணி சாந்தி உதவியதாக என்னிடம் சிலர் கூறினர். இதுகுறித்து அவரிடமும், அண்ணனிடமும் நான் கேட்டு வந்தேன். ஆனால் அந்த விவகாரத்தில் தான் உதவவில்லை என சாந்தி மறுத்து விட்டார்.

முன்விரோதம்

இருந்தாலும் எனது மகள் காதல் திருமணம் செய்து கொண்டது எனக்கு கவுரவ பிரச்சினையாகவே இருந்து வந்தது. இதன் காரணமாக சாந்தி மீது முன்விரோதத்தில் இருந்தேன். சம்பவம் நடந்த அன்று மதுபோதையில் சாந்தி வீட்டிற்கு சென்றேன். அப்போது எனக்கும், அங்கிருந்த சாந்தி மற்றும் எனது அண்ணனுக்கும் இதுதொடர்பாக தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த நான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சாந்தியின் கழுத்தை அறுத்துவிட்டேன். இதையடுத்து அங்கிருந்து தப்பி சென்று விட்டேன். ஆத்திரத்தில் அண்ணியை கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த என்னை போலீசார் கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து கருணாநிதியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story