சென்சார் உதவியுடன் கண்காணிக்கப்படும் ரெயில்வே கேட்


சென்சார் உதவியுடன் கண்காணிக்கப்படும் ரெயில்வே கேட்
x

சென்சார் உதவியுடன் ரெயில்வே கேட்கள் கண்காணிக்கப்படுகின்றன.

திருச்சி

ரெயில்வே கேட்கள்

திருச்சி ரெயில்வே கோட்டத்தில் 515 இடங்களில் ரெயில்வே கேட்கள் உள்ளன. இதில் ரெயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள கேட்கள், ஸ்டேஷன் மாஸ்டர்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. என்ஜினீயரிங் கட்டுப்பாட்டில் உள்ள 388 கேட்களில் 197 கேட்கள் ரெயில் நிலைய சிக்னல் மூலம் இணைக்கப்பட்டு ரெயில் வரும்போது தானாக மூடிக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 191 ரெயில்வே கேட்களில் ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஒரு சில நேரங்களில் கேட் மூடப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. அவ்வாறு ஊழியரின் அலட்சியத்தால் ஒருவேளை கேட் மூடப்படாமல் இருந்தால் விபத்து நடக்கவும் வாய்ப்புள்ளது. இதையடுத்து இவற்றை கண்காணிப்பதற்காக என்ஜினீயரிங் கட்டுப்பாட்டில் உள்ள ரெயில்வே கேட்களில் சென்சார் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்சார் கருவி

அதன்படி திருச்சி ரெயில்வே கோட்டத்தில் முதன்முறையாக கடலூர்-மயிலாடுதுறை இடையே 10 ரெயில்வே கேட்களில் சென்சார் கருவி சோதனை அடிப்படையில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் செயல்பாடுகள், திருச்சி கோட்ட இயக்கப்பிரிவு அதிகாரிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து திருச்சி ரெயில்வே கோட்ட முதுநிலை இயக்க மேலாளர் ஹரிகுமார் கூறியதாவது:-

ரெயில்வே கேட்களில் பொருத்தப்படும் சென்சார் அருகில் உள்ள ரெயில் நிலையத்தில் உள்ள கையடக்க கணினியுடன் இணைக்கப்படும். ரெயில் வருவதற்கு சற்று நேரத்துக்கு முன் கேட் மூடியிருந்தாலோ அல்லது திறந்து இருந்தாலோ ரெயில் நிலையத்தில் உள்ள கையடக்க கணினியில் குறியீடு காண்பிக்கும். அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட கேட் கீப்பரை தொடர்பு கொண்டு உரிய தகவலை தெரிவிக்க முடியும். இந்த சென்சாரில் கேட் திறக்கப்படும், மூடப்படும் நேரம் ஆகிய விவரங்கள் ஒரு மாதத்துக்கு சேமிக்கப்பட்டு இருக்கும்.

செயல்பாடுகள் ஆய்வு

ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதில் பதிவாகியுள்ள நேரத்தை கணக்கிட்டு விசாரணை செய்யலாம். திருச்சி கோட்டத்தில் தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை மார்க்கத்தில் உள்ள ரெயில்வே கேட்களில் தான் இந்த வகை சென்சார் கருவி தேவை அதிகமாக இருக்கிறது. தற்போது சோதனை அடிப்படையில் பொருத்தப்பட்டுள்ள இந்த கருவிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தபிறகு, இன்னும் 6 மாதங்களில் மீதமுள்ள ரெயில்வே கேட்களில் இந்த கருவிகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story