வாலிபரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை


வாலிபரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
x

வாலிபரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூரில் செல்போன் கடை வைப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை குத்திக்கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.

வாலிபருக்கு கத்திக்குத்து

கும்பகோணம் மாவட்டம் வன்னிக்குடி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 27). இவரும், இவரது தம்பி ஆனந்தகுமாரும் (24) திருப்பூர் போயம்பாளையத்தில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தனர். இந்தநிலையில் அவர்கள் அந்த பகுதியில் புதிதாக செல்போன் கடை திறக்க திட்டமிட்டனர். இதற்கு பிச்சம்பாளையம் புதூர் ஸ்ரீநகரை சேர்ந்த ஜார்ஜ் என்கிற அசோக்குமார் (வயது 42) மற்றும் அவருடைய நண்பர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் கடந்த 5-5-2013 அன்று மாலை சுரேஷ்குமார் தனது தம்பி ஆனந்தகுமாருடன் அனுப்பர்பாளையம் வாரச்சந்தைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஜார்ஜ் மற்றும் நண்பர்கள் சுரேஷ்குமார், ஆனந்தகுமாரை வழிமறித்து, 'எங்களுக்கு போட்டியாக செல்போன் கடை வைக்க போகிறாயா?' என்று சத்தம் போட்டு ஜார்ஜ் கத்தியால் ஆனந்தகுமாரின் வயிற்றிலும், சுரேஷ்குமாரின் நெஞ்சிலும் குத்தினார். இதில் இருவரும் படுகாயமடைந்து சரிந்தனர்.

ஆயுள் தண்டனை

உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இருவரையும் மீட்டு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன்பிறகு மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்தநிலையில் ஆனந்தகுமார் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதைத்தொடர்ந்து கொலை வழக்காக மாற்றம் செய்து ஜார்ஜை போலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்றுதீர்ப்பு கூறப்பட்டது. கொலை மற்றும் கொலைமுயற்சி குற்றத்துக்காக ஜார்ஜூக்கு ஆயுள் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் திருப்பூர் மாவட்ட குற்றத்துறை அரசு வக்கீல் கனகசபாபதி ஆஜராகி வாதாடினார்.


Next Story