செந்தில் பாலாஜி வழக்கில்: அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிகாரத்தை மீறி செயல்பட்டுள்ளனர் -மூத்த வக்கீல் வாதம்


செந்தில் பாலாஜி வழக்கில்: அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிகாரத்தை மீறி செயல்பட்டுள்ளனர் -மூத்த வக்கீல் வாதம்
x

செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை மீறி செயல்பட்டுள்ளனர் என்று சென்னை ஐகோர்ட்டில் மூத்த வக்கீல் கபில்சிபில் வாதிட்டார்.

சென்னை,

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக்கோரி அவரது மனைவி மேகலா, சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதையடுத்து, இந்த வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். இவர் முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

ஆதாரம் இல்லை

அப்போது, மனுதாரர் தரப்பில் டெல்லி மூத்த வக்கீல் கபில் சிபில், "செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக பணம் வைத்திருப்பதாகவோ அல்லது மறைத்து வைத்திருப்பதாகவோ எந்த ஆதாரமும் இல்லை. ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே அமலாக்கத்துறையால் கைது செய்ய முடியும். சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின்படி அமலாக்கத்துறை விசாரணை மட்டுமே நடத்த முடியும். கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அதிகாரம் இல்லை" என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, "செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டுக்கு அதிகாரம் உள்ளபோது, இந்த ஆட்கொணர்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.

அதிகாரத்தை மீறிய செயல்

அதற்கு மூத்த வக்கீல் கபில்சிபில், "அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கவும், அவர் நீதிமன்ற காவலில் தொடர வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், அதற்கு மறுநாள் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி முதன்மை செசன்சு கோர்ட்டில் அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்துள்ளது. கோர்ட்டு, 8 நாட்கள் விசாரிக்க நிபந்தனையுடன் அனுமதி வழங்கியும், விசாரணை நடத்தவில்லை. நிபந்தனையின் காரணமாக விசாரிக்க முடியவில்லை என்றால், இந்த ஐகோர்ட்டை அதிகாரிகள் அணுகியிருக்கலாம். டாக்டர்கள் விசாரணை நடத்தலாம் என்று கூறியும் அவர்கள் விசாரிக்கவில்லை. இந்த வழக்கில் அமலாக்கத்துறை தன் அதிகாரத்தை மீறி செயல்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரத்தை கையில் எடுத்துள்ளது" என்று விளக்கம் அளித்து, தன் வாதத்தை நிறைவு செய்தார்.

எந்திரத்தனம்

இவரை தொடர்ந்து மனுதாரரின் மற்றொரு மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ தன் வாதத்தை தொடங்கினார். அப்போது, செந்தில் பாலாஜியை கைது செய்ததே சட்டவிரோதம். வீட்டில் சோதனை மற்றும் விசாரணை நடந்தபோது, செந்தில் பாலாஜி முழு ஒத்துழைப்பு கொடுத்தார் என்று கூறி அமலாக்கத்துறை, பின்னர் முரண்டு பிடித்ததால், அவரை கைது செய்தோம் என்று கூறியுள்ளனர்.

மேலும் செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைத்த மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு பிறப்பித்த உத்தரவே சட்டவிரோதம். எந்திரத்தனமாக அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்" என்றார்.

ஏன் வாங்கவில்லை?

அதற்கு நீதிபதி, "செந்தில் பாலாஜி சட்டப்படி நடந்துக் கொண்டாரா? அவரது கைது சம்பவத்தில் மிகப்பெரிய நாடகம் நடந்துள்ளது என்று இரு நீதிபதிகளில் ஒருவரான டி.பரதசக்கரவர்த்தி தன் தீர்ப்பில் கூறியுள்ளார். கைதுக்கான காரணங்கள் குறித்த ஆவணங்களை வழங்கியபோது செந்தில் பாலாஜி ஏன் வாங்கவில்லை? அவரை சட்டவிரோதமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருந்தால், அதற்குரிய இழப்பீட்டை சட்டப்படி பெறலாமே?" என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

ஒத்துழைப்பு

இதற்கு மூத்த வக்கீல், "கைதுக்கான காரணங்கள் குறித்த ஆவணங்கள் இமெயிலில் அனுப்பியுள்ள பிறகு திருத்தப்பட்டுள்ளது. இதுவும் ஒருவகையில் முறைகேடு. ஜூன் 13-ந்தேதி அன்று தொடங்கிய சோதனை மறுநாள் வரை நீடித்துள்ளது. அதற்கு செந்தில் பாலாஜி முழுமையாக ஒத்துழைப்பு அளித்து வாக்குமூலமும் அளித்துள்ளார். ஆனால் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என அமலாக்கத்துறையினர் குற்றம் சாட்டுகின்றனர். 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க கீழ் கோர்ட்டு அனுமதி வழங்கியது. ஒருவேளை விசாரிக்க வேண்டாம் என முடிவு செய்திருந்தால் அந்தக் காவலை திரும்ப வழங்கியிருக்க வேண்டும். அதை செய்யாமல், செசன்சு கோர்ட்டுக்கு இமெயில் அனுப்பியிருக்கக்கூடாது" என்று வாதிட்டார். இவரது வாதமும் நேற்று முடிந்தது.

இதையடுத்து, இந்த வழக்கை இன்று (புதன்கிழமை) விசாரிப்பதாகவும், அப்போது அமலாக்கத்துறை தரப்பில் வாதம் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story