செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி.. முதல்-அமைச்சர் கையில் முடிவு: வழக்கை முடித்து வைத்தது உயர் நீதிமன்றம்


செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி.. முதல்-அமைச்சர் கையில் முடிவு: வழக்கை முடித்து வைத்தது உயர் நீதிமன்றம்
x
தினத்தந்தி 5 Sept 2023 5:34 PM IST (Updated: 5 Sept 2023 6:16 PM IST)
t-max-icont-min-icon

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது தார்மீக ரீதியாக சரியல்ல என்றும் கருத்து தெரிவித்தனர்.

சட்டவிரோத பணப்பறிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.

ராமச்சந்திரன், அதிமுக முன்னாள் எம்.பி., ஜெயவர்த்தன் ஆகியோர் இந்த வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். மேலும், வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவரும் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகள் மீதான வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்குகளில் தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பதா, வேண்டாமா? என்பது குறித்து முதல்-அமைச்சர்தான் முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்து, வழக்குகளை முடித்து வைத்தனர்.

அதேசமயம், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது தார்மீக ரீதியாக சரியானதல்ல என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.


Next Story