கொங்கு மண்டலத்தில் தி.மு.க.வின் வெற்றியை தடுக்கவே செந்தில்பாலாஜி கைது


தினத்தந்தி 17 Jun 2023 2:30 AM IST (Updated: 17 Jun 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் தி.மு.க.வின் வெற்றியை தடுக்கவே செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு உள்ளதாக கோவை பொதுக்கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. குற்றம்சாட்டினார்.

கோயம்புத்தூர்

நாடாளுமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் தி.மு.க.வின் வெற்றியை தடுக்கவே செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு உள்ளதாக கோவை பொதுக்கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. குற்றம்சாட்டினார்.

பொதுக்கூட்டம்

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. கூறியதாவது:-

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதை, குடும்பத் தின் இழப்பாக கருதி கூட்டணி கட்சி தலைவர்கள் இங்கு கூடி உள்ளனர். அதிகார மமதையில் செயல்படும் பா.ஜ.க. ஆட்சிக்கு விரைவில் முடிவு கட்ட வேண்டும்.

அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கு பற்றி அவரிடம் தெரிவிக்க வில்லை. இரவு 12 மணி வரைக்கும் வீட்டில் எதுவும் எடுக்கவில்லை. அனுப்பாத சம்மனுக்கு கையெழுத்து போட மிரட்டி உள்ளனர். அதை பற்றி கேட்டபோது கடுமையாக தாக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து நீதிமன்றத்தில் விரைவில் தெரிவிப்போம்.

நெஞ்சுவலி வந்தவரை நடிக்கிறார் என கூறி அதிகாரிகள் தாக்கி உள்ளனர். அவருக்கு இதயத்தில் 3 அடைப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அவரின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

பதில் சொல்ல வேண்டும்

மத்திய பா.ஜ.க. ஆட்சி இன்னும் 6 மாதமோ, ஒரு வருடமோ தான். அதற்கு பின்பு வரும், புதிய ஆட்சிக்கு இவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

மத்திய பா.ஜனதாவின் நடவடிக்கை தொடர்பாக விசாரணை கமிஷன் அமைப்போம். அதற்கு பதில் சொல்லியே தீர வேண்டும்.

டெல்லி துணை முதல்-மந்திரி மணீஸ்சிசோடியா, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, கர்நாடக துணை முதல்- மந்திரியாக உள்ள டி.கே.சிவக்குமார் மற்றும் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் உறவினர் உள்பட பலரிடம் அமலாக்கத்துறை ஏற்கனவே விசாரணை நடத்தி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல்

அந்த வகையில் செந்தில்பாலாஜி மீதான அமலாக்கத்துறையின் மோசமான நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. மிரட்டலுக்கு பணியாத மாநிலம் தமிழ்நாடு. நெருப்பாற்றில் பயணிப்பவர் மு.க.ஸ்டாலின்.

அண்ணாமலையை இப்போது தான் நீதிமன்றத்திற்கு வர வைத்திருக்கிறோம். கொங்கு மண்டலத்தில் 11 நாடாளுமன்ற தொகுதியிலும் வெற்றியை கொண்டு வரும் திறமை கொண்டவர் செந்தில் பாலாஜி.

அதை தடுக்கத்தான் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள். செந்தில் பாலாஜி தலைமையில், 11 நாடாளுமன்ற தொகுதியை வெற்றி பெற செய்வார். கொங்கு மண்டலம் கோபாலபுரத்தை நோக்கி பயணிக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்


Next Story