தனி, தொடர்பு அதிகாரிகள் உண்ணாவிரதம்


தனி, தொடர்பு அதிகாரிகள் உண்ணாவிரதம்
x

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தனி, தொடர்பு அதிகாரிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

சிதம்பரம்,

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சுமார் 700 பேர் தனி மற்றும் தொடர்பு அதிகாரிகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஊதியத்தை குறைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது. இதை கைவிடக்கோரி, தனி மற்றும் தொடர்பு அதிகாரிகள் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை பல்கலைக்கழக பூமா கோவில் அருகே தனி மற்றும் தொடர்பு அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்கத் தலைவர் தனசேகர பாண்டியன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் நெடுமாறன், பொருளாளர் சிவசங்கரன் மற்றும் ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.

ஊதிய உயர்வு

தனி மற்றும் தொடர்பு அதிகாரிகளுக்கு மட்டும் காழ்ப்புணர்ச்சியுடன் பாரபட்சமாக வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யக்கோரியும், தனி மற்றும் தொடர்பு அதிகாரிகளை ஊதிய பாதுகாப்புடன் பணி நிரவல் செய்திட வேண்டும், கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வருடாந்திர ஊதிய உயர்வை வழங்குதல், இதுவரை அமல்படுத்தப்படாமல் உள்ள 7-வது ஊதிய குழுவின் பரிந்துரைகளை உடனே அமல்படுத்த வேண்டும்,

இது வரை பணி நிரந்தர ஆணை வழங்கப்படாத தனி மற்றும் தொடர்பு அதிகாரிகளுக்கு பணி நிரந்தர ஆணையை உடனே வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

காலை 9 மணிக்கு தொடங்கிய போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட தனி மற்றும் தொடர்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story