ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டு அமைப்பு


ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டு அமைப்பு
x
தினத்தந்தி 16 Sept 2023 4:30 AM IST (Updated: 16 Sept 2023 4:31 AM IST)
t-max-icont-min-icon

டெங்கு பரவல் எதிரொலியாக ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.

நீலகிரி

ஊட்டி

டெங்கு பரவல் எதிரொலியாக ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.

டெங்கு காய்ச்சல்

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வருகிறது. இதன் எதிரொலியாக அம்மாநில எல்லையையொட்டி உள்ள நீலகிரி மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் கேரளாவில் இருந்து வருகிறவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்று கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சில மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்து இருக்கிறது. இதனால் 5 நாட்களுக்கு மேல் கடும் காய்ச்சல் இருப்போருக்கு எலிசா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்றும், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

40 படுக்கைகள்

நீலகிரியில் டெங்கு பாதிப்பு இல்லை. இருப்பினும், வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்து செல்கின்றனர். இதனால் டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது. இதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் பத்மினி கூறியதாவது:-

ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க 40 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதில் 10 தீவிர சிகிச்சை படுக்கைகள், 25 சாதாரண படுக்கைகள், குழந்தைகளுக்கு 5 படுக்கைகள், கொசு வலைகள் தயார் நிலையில் உள்ளன. பாதிப்பு அதிகமானால், கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதேபோல் சுகாதார பணியாளர்கள் மூலம் வாகனங்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் புகை மருந்து அடிக்கும் பணி நடந்து வருகிறது. பொது இடங்களில் தண்ணீர் தேங்கி இருக்கும் பகுதிகள் சுத்தம் செய்யப்படுகிறது. வீடுகளில் குளிர்சாதன பெட்டிக்கு பின்புறம் தேங்கும் தண்ணீர், மொட்டை மாடியில் பயன்படுத்தாத தண்ணீர் தொட்டிகளில் இருக்கும் தண்ணீரை பொதுமக்கள் சுத்தம் செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story