சாக்லேட் கொடுத்து 4 வயது மாணவி தொடர் பாலியல் வன்கொடுமை: கணித ஆசிரியர் கைது - பகீர் தகவல்...!


சாக்லேட் கொடுத்து 4 வயது மாணவி தொடர் பாலியல் வன்கொடுமை: கணித ஆசிரியர் கைது - பகீர் தகவல்...!
x

சேத்துப்பட்டு அருகே தனியார் பள்ளியில் படிக்கும் 4 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

சேத்துப்பட்டு,

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த மருத்துவம் பாடி கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ். உலகம் பட்டு அரசு பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தனியார் மெட்ரிக் பள்ளி நடத்தி வருகிறார்‌.

இவர் அந்த பள்ளியின் தாளாளராக உள்ளார். காமராஜ் அடிக்கடி அவரது மனைவி நடத்தும் பள்ளிக்கு வந்து நிர்வாகத்தை கவனித்து வந்துள்ளார்.

அந்தப் பள்ளியில் படிக்கும் 4 வயது சிறுமிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் பெற்றோர்கள் சிறுமியை போளூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.

ஆனாலும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினர் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இருப்பதை தெரிவித்தனர்.

மேலும், இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட சைல்டுலைன் பிரிவுக்கு தனியார் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது.

அவர்கள் திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனுக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில் போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதில் பள்ளிக்கு சென்ற சிறுமையை சாக்லேட் கொடுத்து தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து பள்ளியின் சம்பந்தப்பட்டவர்களின் போட்டோக்களை காண்பித்து சிறுமியிடம் அடையாளம் காணும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது பள்ளி தாளாளர் பிரபாவதியின் கணவர் காமராஜ் என்பது தெரிய வந்தது.

இந்த தகவல் வெளியானதும் நேற்று பள்ளி முன்பு பொதுமக்கள் திரண்டனர். இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. பள்ளி வளாகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே திருச்செந்தூர் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த காமராஜை திருவண்ணாமலை மாவட்ட போலீசார் கொடுத்த தகவலின் பெயரில் எட்டயபுரம் போலீசார் கைது செய்தனர். அவரை போளூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தனியார் பள்ளி முன்பு 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story