சர்வீஸ் சாலை மூடல்; பொதுமக்கள் அவதி
சாலை சீரமைப்பு பணிக்காக கிணத்துக்கடவில் சர்வீஸ் சாலை மூடப்பட்டது. இதனால் பொதுமக்கள், பயணிகள் அவதியடைந்தனர்.
கிணத்துக்கடவு,
சாலை சீரமைப்பு பணிக்காக கிணத்துக்கடவில் சர்வீஸ் சாலை மூடப்பட்டது. இதனால் பொதுமக்கள், பயணிகள் அவதியடைந்தனர்.
சீரமைப்பு பணி
கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் கிணத்துக்கடவு பகுதியில் மேம்பாலம் உள்ளது. இதில் மேம்பாலத்தின் இருபுறங்களிலும் சர்வீஸ் சாலையும் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது கிணத்துக்கடவு பஸ் நிலையம் முதல் கல்லாங்காடு புதூர் வரை உள்ள சர்வீஸ் சாலையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆங்காங்கே குழி ஏற்பட்டு உள்ளதால், மழை காலங்களில் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வந்தனர்.
இதுகுறித்து பலமுறை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் கோவை-பொள்ளாச்சி சாலையில் பழுதடைந்த நிலையில் உள்ள அனைத்து சாலைகளையும் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இறக்கி விடப்பட்டனர்
இந்தநிலையில் கிணத்துக்கடவு பஸ் நிலையத்தில் இருந்து கல்லாங்காட்டு புதூர் வரை உள்ள பழுதடைந்த சாலையை சீரமைக்கும் பணி நேற்று நடைபெற்றது. தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணியின் போது நெடுஞ்சாலைத்துறையினர் கோதவாடி பிரிவு பகுதியில் சாலையை பிளாஸ்டிக் தடுப்புகள் வைத்து அடைத்தனர். இதனால் பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு வழியாக கோவை சென்ற அனைத்து பஸ்களும் கிணத்துக்கடவு ஊருக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் பயணிகள் சாலைப்புதூர் பகுதியில் சாலையில் இறக்கிவிட பட்டனர். சில பயணிகளை மேம்பாலம் தாண்டி அரசம்பாளையம் பிரிவில் இறக்கி விட்டு சென்றனர். அப்போது மழை பெய்ததால் பயணிகள் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து கிணத்துக்கடவுக்கு வந்தனர்.
சிரமம்
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கிணத்துக்கடவு வருவதற்கு பொள்ளாச்சியில் இருந்து சர்வீஸ் சாலை மட்டுமே உள்ளது. அந்த வழியை பகலில் சீரமைத்ததால், மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பயணிகள் கிணத்துக்கடவுக்கு வருவதில் சிரமம் ஏற்பட்டது. பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இரவு நேரங்களில் சீரமைக்க வேண்டும் என்றனர்.