"மனிதனுக்கு செய்யும் சேவை இறைவனுக்கு செய்வது போன்றது"- கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
“மனிதனுக்கு செய்யும் சேவை இறைவனுக்கு செய்வது போன்றதாகும்” என்று தென்காசியில் நடைபெற்ற விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
"மனிதனுக்கு செய்யும் சேவை இறைவனுக்கு செய்வது போன்றதாகும்" என்று தென்காசியில் நடைபெற்ற விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
அர்ப்பணிப்பு
தென்காசி அருகே ஆய்க்குடியில் இயங்கிவரும் அமர்சேவா சங்கத்தின் 40-வது ஆண்டு விழா மற்றும் பல்வேறு புதிய கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு அமர்சேவா சங்க வளாகத்தில் கவர்னரின் விருப்ப நிதியிலிருந்து நன்கொடையாக பெற்று கட்டி முடிக்கப்பட்ட சுற்றுச்சுவர், பெங்களூரு ஏ.பி.பி. நிறுவனம் சார்பில் நன்கொடை பெற்று அமைக்கப்பட்டுள்ள சோலார் மின்திட்டம் மற்றும் சென்னை சன் மின்னா இந்தியா நிறுவனம் மூலம் கட்டப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பல்நோக்கு பயிற்சி அரங்கம் ஆகியவற்றை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வரலாற்று சிறப்புமிக்க இந்த பகுதியில் அமர்சேவா சங்கம் கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக இந்த சங்கம் இயங்கி வருகிறது. இதனால் பல குடும்பங்கள் நன்கு வாழ்ந்து வருகின்றன. இந்த சேவா சங்கத்தின் தலைவர் ராமகிருஷ்ணன் இதனை 40 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி உள்ளார். பின்னர் செயலாளர் சங்கரராமன் இதில் இணைந்துள்ளார். இவர்கள் இருவரும் தங்களை இந்த பணிக்காக அர்ப்பணித்துள்ளனர்.
ஒத்துழைப்பு அளிப்போம்
மாற்றுத்திறனாளி என்பது மனதுக்கு அல்ல என்பதை இவர்கள் நிரூபித்து உள்ளனர். மனிதனுக்கு செய்யும் சேவை, இறைவனுக்கு செய்வது போன்றதாகும். இந்த சங்கம் மேலும் பல சாதனைகளை இந்த சமூகத்துக்கு புரிந்து வளர நாம் அனைவரும் ஒத்துழைப்பு அளிப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில், சிறப்பாக செயல்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினார்.
கலெக்டர் ஆகாஷ்
விழாவில் தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், 'நான் பொறுப்பேற்று மூன்று நாட்களில் தமிழக கவர்னருடன் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அமர்சேவா சங்கம் மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு செயல்பாடுகளை சிறப்பாக செய்து வருகிறது' என்றார்.
அமர்சேவா சங்க தலைவர் ராமகிருஷ்ணன் வாழ்த்தி பேசினார். சென்னை சன் மின்னா இந்தியா நிறுவன முதன்மை நிர்வாக இயக்குனர் ஜெகநாதன் முன்னிலை வகித்தார். அமர்சேவா சங்க செயலாளர் சங்கரராமன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ரவிஅருணன், அச்சன்புதூர் பேரூராட்சி தலைவர் டாக்டர் சுசிகரன், தென்காசி மீரான் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் அப்துல் அஜீஸ், தென்காசி பஞ்சாயத்து யூனியன் தலைவர் ஷேக் அப்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அமர் சேவா சங்க இணை செயலாளர் விஸ்வநாதன் கணேசன் நன்றி கூறினார்.