மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் காலை உணவு வழங்கும் பணி


மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் காலை உணவு வழங்கும் பணி
x

திண்டுக்கல் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் பணியை கலெக்டர் விசாகன் தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல்

காலை உணவு

தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்கிடையே நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கும் காலை உணவு வழங்கும் வகையில் திட்டத்தை முதல்-அமைச்சர் விரிவுபடுத்தி உத்தரவிட்டார்.

அதன்படி திண்டுக்கல் சந்தை ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. இதனை கலெக்டர் விசாகன் நேற்று மாணவ-மாணவிகளுக்கு உணவு பரிமாறி தொடங்கி வைத்தார். இதன்மூலம் அந்த பள்ளியில் பயிலும் 81 பேர் பயன்பெறுவது குறிப்பிடத்தக்கது.

2,285 மாணவ-மாணவிகள்

இதுகுறித்து கலெக்டர் விசாகன் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் முதற்கட்டமாக திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 1,233 பேரும், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய பகுதியில் 34 தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 1,052 பேரும் என மொத்தம் 2,285 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டதால் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இன்று (நேற்று) முதல் காலை உணவு வழங்கப்படுகிறது, என்றார்.

இதில் மாநகராட்சி ஆணையா் சிவசுப்பிரமணியன், என்ஜினீயர் நாராயணன், உதவி என்ஜினீயர் சாமிநாதன், தலைமை ஆசிரியை சாந்தினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story