நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம்
நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம் பெற விண்ணபிக்க வருகிற 10-ந்தேதி கடைசி நாள் என்று கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம் பெற விண்ணபிக்க வருகிற 10-ந்தேதி கடைசி நாள் என்று கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாட்டுக்கோழி பண்ணை
கிராமப்புறங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பதில் திறன் கொண்ட பயனாளிகளுக்கு சிறிய அளவிலான (250 கோழிகள்) நாட்டுக்கோழிப்பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம் நாகை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
இதன் மூலம் ஊரகப் பகுதிகளில் உள்ளவர்கள், வேலைவாய்ப்புடன் நிரந்தர கூடுதல் வருமானம் பெறமுடியும். இந்த திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளுக்கு ஒசூர் கால்நடை பண்ணையில் இருந்து 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கப்படும்.
50 சதவீதம் மானியம்
நாட்டுக்கோழிப்பண்ணை அமைக்க தேவையான கோழிக்கொட்டகை கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு (தீவனத் தட்டு மற்றும் தண்ணீர் வைக்கும் தட்டு) மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு (கோழி வளரும் வரை) ஆகியவற்றிற்கான மொத்த செலவில் 50 சதவீதம் மானியமாக மாநில அரசால் வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் மீதமுள்ள 50 சதவீத பங்களிப்பை வங்கி மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ திரட்ட வேண்டும்.பயனாளிகளிடம் கோழிக்கொட்டகை அமைக்க மின் இணைப்புடன் கூடிய 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். பண்ணை அமைக்கும் பகுதி மனித குடியிருப்புகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை
பயனாளிகள் நாகை மாவட்டத்தில் நிரந்தரமாக குடியிருப்பவராக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கட்டுமானப்பணிகள், தீவனம், உபகரணங்கள் வாங்குதல் போன்ற அனைத்து செயல்முறைகளும் பயனாளியால் சொந்த செலவில் மேற்கொள்ள தகுதி உடையவராக இருக்க வேண்டும். மாவட்டத்தில் குறைந்தபட்சம் 3 பயனாளிகள் முதல் 6 பயனாளிகள் வரை தேர்ந்தெடுக்கப்படுவர். இதில் 30 சதவீதம் ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்படும்.
10-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிதாரர்கள் ஆதார் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா அடங்கல் நகல், 50 சதவீத தொகை அளிப்பதற்கான வங்கி இருப்பு விவரம், வங்கிக்கடன் ஒப்புதல் விவரம், 3 ஆண்டுகள் தொடர்ந்து பண்ணை பராமரிப்பதற்கான உறுதிமொழி மற்றும் 2022-23-ம் ஆண்டிற்கான நாட்டுக்கோழி வளர்ப்புத்திட்டத்தில் பயனடையவில்லை என்பதற்கான சான்றுடன் அருகிலுள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை வருகிற 10-ந்தேதிக்குள் அணுகி விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.