இயற்கை இடுபொருள் தயாரிப்பு மையம் அமைக்க உழவர் குழுக்களுக்கு நிதி உதவி


இயற்கை இடுபொருள் தயாரிப்பு மையம் அமைக்க உழவர் குழுக்களுக்கு நிதி உதவி
x
தினத்தந்தி 13 Oct 2023 6:45 PM GMT (Updated: 13 Oct 2023 6:47 PM GMT)

மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் உழவர் குழுக்களுக்கு இயற்கை இடுபொருள் தயாரித்தல் மையம் அமைக்க நிதி உதவி வழங்கப்படவுள்ளது.

சிவகங்கை

இயற்கை இடுபொருட்கள்

கலெக்டர் ஆஷாஅஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- 2023-2024-ம் நிதியாண்டில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கக இடுபொருட்களான பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம், மண்புழுஉரம், அமிர்த கரைசல், மீன் அமிலம் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்ய ஆர்வமுள்ள உழவர் குழுக்களுக்கு இயற்கை இடுபொருள் தயாரித்தல் மையம் அமைக்க ஒரு குழுவிற்கு ரூ.1 லட்சம் வீதம் நிதியுதவி வழங்கப்படுகிறது.

இயற்கை இடுபொருட்களை பயன்படுத்துவதன் மூலம் மண்வளம், நீர்வளம் பாதுகாக்கப்படுவதும் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்துவதும், அங்கக வேளாண்மையை உழவர்களிடையே பிரபலப்படுத்தி ஊக்கப்படுத்துவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

ரூ.1 லட்சம் நிதியுதவி

இத்திட்டத்தில் இயற்கை இடுபொருள் தயாரிப்பு மையங்கள் நிறுவுவதற்கு அங்கக வேளாண்மையில் ஈடுபட்டுள்ள உழவர் குழுக்கள் அல்லது அங்கக வேளாண்மையில் ஆர்வமுள்ள விவசாயிகளை கொண்டு உருவாக்கப்பட்ட குழுக்கள் மாவட்ட கலெக்டர் தலைமையிலான தேர்வுகுழுவின் ஒப்புதலை பெறுதல் வேண்டும். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட குழுக்களுக்கு இயற்கை இடுபொருள் உற்பத்திக்கான கலன்கள், மண்புழுஉரம் தயாரிக்கும் படுக்கை, பேக்கேஜிங், லேபிலிங் மற்றும் மூலப்பொருட்களை வாங்குவதற்காக ஒரு குழுவிற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.

உற்பத்திசெய்தல், சேமித்தல், பயன்பாடு, விற்பனை குறித்து உழவர் பயிற்சி நிலையம், வேளாண் அறிவியல் பயிற்சி மையம், இயற்கை இடுபொருட்கள், தயாரித்து விற்பனை செய்யும் விவசாயிகளை கொண்டு பயிற்சி அளிக்கப்படும்.

உழவர் சந்தையில் விற்க அனுமதி

தேர்வுசெய்யப்பட்ட குழுக்களுக்கு வரைவு திட்டங்களின்படி தேவைக்கேற்ப கூடுதல் செலவினம் மேற்கண்ட தொகையினை கூட்டுறவுவங்கி, வணிக வங்கிகள் மூலம் கடன் இணைப்பு பெற்றுதர ஆவண செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் குழுக்களுக்கு தங்கள் பொருட்களை உழவர் சந்தையில் விற்பனை செய்ய தேவையான அனுமதி வழங்கப்படும்.

இதில் பயன்பெறவிரும்பும் உழவர் குழுக்கள் உழவன் செயலியில் பதிவுசெய்தல் வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story