இருசக்கர வாகனங்களுக்கு தீ வைப்பு
இருசக்கர வாகனங்களுக்கு தீ வைப்பு
கணபதி
கோவை கணபதி ராஜீவ் காந்திநகர் பகுதியில் உள்ள பாலாஜி லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் ஈஸ்வரன் (வயது24).இவர் தனது மனைவி பிரியா, சகோதரர் ரஞ்சித் ஆகியோருடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று ஈஸ்வரன் மற்றும் அவரது சகோதரர் ரஞ்சித் ஆகியோர் தங்களது இருசக்கர வாகனங்களை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டனர். அதிகாலையில் ஈஸ்வரனின் மனைவி பிரியா எழுந்து வந்து வீட்டின் முன்பு பார்த்த போது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தங்களது இருசக்கர வாகனங்கள் தீ பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக பிரியா வீட்டின் உள்ளே ஓடிச் சென்று தனது கணவரிடம் இருசக்கர வாகனங்கள் தீப்பற்றி எரிவது குறித்து கூறினார். உடனே ஈஸ்வரன் மற்றும் அவரது தம்பி ரஞ்சித் ஆகியோர் சேர்ந்து தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த இருசக்கர வாகனங்களை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். ஆனால் அதற்குள் இருசக்கர வாகனங்கள் முழுவதுமாக தீக்கிரையானது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.பின்னர் இது குறித்த புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்ணப்பன் நகரை சேர்ந்த ஈஸ்வரனின் உறவினரான கூலி தொழிலாளிகோபால் (34) என்பவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், இரு குடுபம்பத்தினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையால், அவர் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்ததாக ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து கோபாலை போலீசார் கைது செய்தனர்.