மக்கள் நீதிமன்றத்தில் 117 வழக்குகளுக்கு தீர்வு
நெல்லை மாவட்ட மக்கள் நீதிமன்றத்தில் 117 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
நெல்லை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நேற்று சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. அதன் அடிப்படையில் 2023-ம் ஆண்டில் நுகர்வோர் நீதிமன்ற வழக்குகள் மற்றும் இதர வழக்குகளுக்கான மக்கள் நீதிமன்றம் நெல்லை மற்றும் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாக்களில் நடை பெற்றது. இதில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நுகர்வோர் நீதிமன்ற வழக்குகள் மற்றும் இதர வழக்குகள் என மொத்தம் 439 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியை ஐகோர்ட்டு நீதிபதி சேஷசாயி தொடங்கி வைத்தார். மாவட்ட முதன்மை நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான சீனிவாசன் முன்னிலை வகித்தார்.
இந்த விசாரணையின்போது 117 விபத்து மற்றும் இதர வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு காசோலைகள் வழங்கப்பட்டது. இந்த வழக்குகளில் ரூ.5 கோடியே 86 லட்சத்து 88 ஆயிரத்து 273 சமரசத் தொகை வழங்கி முடிக்கப்பட்டது. மேலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத முன்வழக்குகள் ஆகிய வங்கி வழக்குகள் 20 முடிக்கப்பட்டு ரூ.17 லட்சத்து 400 சமரசத்தொகைக்கு முடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட வக்கீல் சங்க தலைவர் ராஜேஷ்வரன், செயலாளர் காமராஜ், டாக்டர் தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான இசக்கியப்பன் செய்திருந்தார்.