மக்கள் நீதிமன்றம் மூலம் 3032 வழக்குகளுக்கு தீர்வு


மக்கள் நீதிமன்றம் மூலம் 3032 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 10 Sept 2023 1:45 AM IST (Updated: 10 Sept 2023 1:45 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் 3,032 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும் 7 தம்பதிகள் இணைந்து வாழ தீர்வு காணப்பட்டது.

கோயம்புத்தூர்
கோவை


கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் 3,032 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும் 7 தம்பதிகள் இணைந்து வாழ தீர்வு காணப்பட்டது.


மக்கள் நீதிமன்றம்


தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி நாடு முழுவதும் மக்கள் நீதிமன்றங்கள் (லோக் அதாலத்) நடைபெறுகிறது. இதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர், அன்னூர், மதுக்கரை ஆகிய இடங்களில் உள்ள கோர்ட்டுகளில் நேற்று மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.


கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி விஜயா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் மோட்டார் வாகன விபத்தில் கணவரை இழந்த சுகன்யா மற்றும் அவரது குடும்பத்திற்கு இழப்பீடு தொகையாக ரூ.32 லட்சத்து 75 ஆயிரத்திற்கான காசோலையை முதன்மை நீதிபதி விஜயா வழங்கினார்.


வழக்குகளுக்கு தீர்வு


மாவட்டம் முழுவதும் நடைபெற்ற இந்த மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரசம் செய்யக்கூடிய சிறுகுற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள் மற்றும் தொழிலாளர் சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கி கடன்கள், கல்வி கடன்கள் வழக்குகள், விவாகரத்து மற்றும் குடும்ப பிரச்சினை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.


இதில் நேற்று ஒரே நாளில் 3,032 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மொத்த தீர்வு தொகை ரூ.35 கோடியே 39 லட்சத்து 74 ஆயிரம் ஆகும்.

மேலும் மக்கள் நீதிமன்றம் மூலம் 5 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்த 88 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதுதவிர மக்கள் நீதிமன்றம் மூலம் பிரிந்து வாழ்ந்த 7 தம்பதிகள் திரும்பவும் இணைந்து வாழ தீர்வு காணப்பட்டது.

தமிழக அளவில் மக்கள் நீதிமன்றம் மூலம் ஒரேநாளில் கோவையில் தான் அதிக வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டதாக சட்டப்பணிகள் ஆணைக்குழுவினர் தெரிவித்தனர்.


இந்த மக்கள் நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதிகள் முரளிதரன், கோவிந்தராஜ், சுந்தரம், ரவி, சார்பு நீதிபதிகள் நம்பிராஜன், சிவகுமார், மோகனம்மாள், மோகனரம்யா, ஹரிஹரன், உரிமையியல் நீதிபதி தேவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டினை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர், சார்பு நீதிபதி சிவா செய்திருந்தார்


Next Story