கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டையில் ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சியில் 316 மனுக்களுக்கு தீர்வு


கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டையில் ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சியில் 316 மனுக்களுக்கு தீர்வு
x

கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டையில் நடந்த ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சியில் 316 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 1,008 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 207 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது. மற்ற மனுக்கள் துறை ரீதியான நடவடிக்கைக்காக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு ஜமாபந்தி அதிகாரியான திருவள்ளூர் மாவட்ட உதவி ஆணையர் (கலால்) பரமேஸ்வரி தலைமை தாங்கினார். கும்மிடிப்பூண்டி தாசில்தார் ராமன், மண்டல துணை தாசில்தார் ஜெயச்சந்திரன், வட்ட வழங்கல் அதிகாரி பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜெ. கோவிந்தராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஜமாபந்தியில் தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு அதற்குரிய சான்றிதழ்களை வழங்கினார்.

ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜோதி தலைமையில் தாசில்தார் ரமேஷ் முன்னிலையில் தொடர்ந்து நடைபெற்ற ஜமாபந்தி நேற்று முடிவடைந்தது. வீட்டுமனை பட்டா, பட்டா மேல்முறையீடு, பட்டா பெயர் மாற்றம், ரேஷன்கார்டு பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், முதியோர் உதவித்தொகை கேட்டு மொத்தம் 730 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 109 மனுக்கள் ஏற்கப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டது. 621 மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

ஜமாபந்தி நிறைவு நாளையொட்டி விவசாயிகள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட வழங்கல் அலுவலர் ஜோதி தலைமை தாங்கினார். கும்மிடிபூண்டி எம்.எல்.ஏ. டி.ஜே. கோவிந்தராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வீட்டுமனை பட்டா உள்பட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தாசில்தார் ரமேஷ், சிறப்பு தாசில்தார் லதா, வட்ட வழங்கல் அலுவலர் ரவி, துணை தாசில்தார் நடராஜன், கிராம நிர்வாக அலுவலர் யுகேந்திரன், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் மாவட்ட தலைவர் சுந்தர்ராஜ், வட்ட தலைவர் கிருஷ்ணகுமார், வட்ட செயலாளர் பிரகாசம் பொருளாளர் ராஜூ, தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, ஊத்துக்கோட்டை பேரூராட்சி தலைவர் அப்துல்ரஷீத், துணைத்தலைவர் குமரவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story