திருச்சி மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,164 வழக்குகளுக்கு தீர்வு
திருச்சி மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,164 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.
திருச்சி மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,164 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.
தேசிய மக்கள் நீதிமன்றம்
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, புதுடெல்லி மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின் படி, திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான பாபு உத்தரவின் பேரில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெற்றது.
திருச்சி நீதிமன்றங்களில் 14 மக்கள் நீதிமன்ற அமர்வுகளும். முசிறி, துறையூர், லால்குடி, மணப்பாறையில் தலா 2 நீதிமன்ற அமர்வுகளும், ஸ்ரீரங்கம் மற்றும் தொட்டியம் ஆகிய நீதிமன்றங்களில் தலா ஒரு நீதிமன்ற அமர்வுகள் என மொத்தம் 24 அமர்வுகளில், தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினர்களையும் அழைத்து சமரச முறையில் பேசி தீர்வு காணப்பட்டது.
குற்றவியல் வழக்குகள்
இந்த நீதிமன்றங்களில் ஏற்கனவே நிலுவையில் உள்ள சமரசம் செய்யக்கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி கடன் வசூல் வழக்கு, மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு கோரிய வழக்குகள், குடும்பநல வழக்குகள், தொழிலாளர் இழப்பீடு வழக்குகள், உரிமையியல் சம்பந்தமான வழக்குகள், மற்றும் நீதிமன்ற நிலுவையில்லா வழக்குகளில் வங்கி மற்றும் நிதிநிறுவன வழக்குகள் போன்ற பலதரப்பட்ட வகையான வழக்குகளில், பங்கேற்ற இருதரப்பினர்களிடையே மக்கள் நீதிமன்றங்களில், சமரச முறையில் பேசி நிரந்தர தீர்வு காணப்பட்டது.
இதில் மொத்தம் சுமார் 11 ஆயிரத்து 813 வழக்குகளுக்கு மேல் சமரச முறையில் தீர்வு காண பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 4,164 வழக்குகளில் தீர்வு காணப்பட்டது. சமரச தீர்வு தொகையாக ரூ.28 கோடியே 19 லட்சத்து 81 ஆயிரத்து 342 வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் நசீர்அலி செய்திருந்தார்.