573 வழக்குகளுக்கு தீர்வு
பொள்ளாச்சியில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 573 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 573 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
மக்கள் நீதிமன்றம்
நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையிலும், வழக்குகளை குறைக்கும் வகையிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நேற்று நடைபெற்றது. அதன்படி பொள்ளாச்சி சப்-கோர்ட்டில் நடந்த மக்கள் நீதிமன்றத்திற்கு கோவை மாவட்ட கூடுதல் நீதிபதி சஞ்சீவ் பாஸ்கர் தலைமை தாங்கினார். இதில் சப்-கோர்ட்டு நீதிபதி மோகனவள்ளி, மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பாரதிராஜன், ஜே.எம்.2 நீதிபதி பிரகாசம், ஜே.எம்.1 நீதிபதி சுவேதாரண்யன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சமரச தீர்வு
மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்துகள் தொடர்பாக 24 வழக்குகள் விசாரைணக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 11 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.30 லட்சத்து 20 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது. அசல் வழக்குகள் 9 எடுத்துக் கொள்ளப்பட்டு, 4 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.31 லட்சத்து 93 ஆயிரத்து 548-த்துக்கும், போக்குவரத்து விதிமுறை மீறல் உள்ளிட்ட 171 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 171 வழக்குகளுக்கும் தீர்வு காணப்பட்டது.
மேலும் இதர பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் சப்-கோர்ட்டு, மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் முதன்மை உரிமையியல் நீதிமன்றம், ஜே.எம். 1, ஜே.எம்.2 ஆகிய கோர்ட்டுகளில் உள்ள 670 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 573 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.2 கோடியே 54 லட்சத்து 47 ஆயிரத்துக்கு சமரசம் செய்யப்பட்டது.
வால்பாறை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில்குமார் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. 156 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, 83 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.