தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 839 வழக்குகளுக்கு தீர்வு
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 839 வழக்குகளுக்கு தீர்வு
நாகையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 839 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
தேசிய மக்கள் நீதிமன்றம்
நாகை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்றுத்தீர்வு அலுவலகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான கந்தகுமார் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் இருந்து சிவில் வழக்குகள், சமரசத்திற்கு எடுத்து கொள்ளக்கூடிய கிரிமினல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், பண மோசடி வழக்குகள், வங்கி வராக்கடன் வழக்குகள் உள்பட 15 ஆயிரத்து 431 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
839 வழக்குகளுக்கு தீர்வு
இதில் 839 வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு ரூ.1 கோடியே 8 லட்சத்து 87 ஆயிரம் வழங்கப்பட்டது. இதில் போக்சோ நீதிமன்ற மாவட்ட நீதிபதி மணிவண்ணன், நிரந்தர மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி நாகராஜன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதியுமான கார்த்திகா, சார்பு நீதிபதி சீனிவாசன், முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி நாகப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர். முன்னதாக வழக்கு ஒன்றிற்கு தீர்வு காணப்பட்டு சம்பந்தப்பட்டவருக்கு ஆணை வழங்கப்பட்டது.