சேது சமுத்திர திட்டத்தை பா.ஜ.க. எதிர்க்கும்


சேது சமுத்திர திட்டத்தை பா.ஜ.க. எதிர்க்கும்
x

ராமர் பாலம் சேதப்படும் வகையில் அமைந்தால் சேது சமுத்திர திட்டத்தை பா.ஜ.க. எதிர்க்கும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

ராமர் பாலம் சேதப்படும் வகையில் அமைந்தால் சேது சமுத்திர திட்டத்தை பா.ஜ.க. எதிர்க்கும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பொங்கல் விழா

குமரி மாவட்டம் அருமனை வட்டாரம் இந்து சமுதாயம், ஆலய நிர்வாகம் சார்பில் 19-வது ஆண்டு பொங்கல் விழா நேற்று இரவு அருமனையில் நடந்தது. இதனையொட்டி அய்யா நிழல் தாங்கலில் இருந்து பிரமாண்ட பேரணி நடந்தது. இந்த பேரணியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். நெடியசாலை, பனிச்சவிளை, அருமனை சந்திப்பு, நெடுங்குளம் சந்திப்பு வழியாக மேலத்தெருவை சென்றடைந்தது.

பேரணிக்கு இந்து முன்னணி தலைவர் செல்லன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் உமாரதி, மீனாதேவ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிங்காரி மேளம், கரகாட்டம், ஒயிலாட்டம் பல்வேறு விதமான கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

அண்ணாமலை பேச்சு

பின்னர் இரவில் நடந்த விழாவில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அணிவகுப்பை தடை செய்த பிறகுதான் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். வளர்ச்சி அதிகமாக இருக்கிறது. எனக்கு இப்போது திராவிடத்தை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. இயற்கையை பொறுத்தவரை எந்த நிறுவனமும் மூன்று தலைமுறைக்கு மேல் இருக்காது. தி.மு.க. மூன்று தலைமுறைக்கு வந்துவிட்டது. உதயநிதியை அமைச்சர் ஆக்கியது ஒட்டகத்தின் மீது வைக்கப்பட்ட புல் போன்று திராவிடத்தின் முதுகெலும்பை உடைக்கப்போகிறது. தி.மு.க.வின் மொத்த ஆட்சி காலம் 60 மாதம். அதில் 20 மாதத்தை முடித்து விட்டது. 40 மாதத்தில் என்ன செய்யப்போகிறார்கள். தமிழகத்தில் காவல்துறையைச் சேர்ந்த பெண் மீது கை வைத்த சம்பவம் உ.பி.யில் நடந்திருந்தால் ஒரு கை மட்டுமல்ல மற்றொரு கையும், காலும் இருந்திருக்காது. தமிழகத்தில் புதிதாக தொழிற்சாலைகள் வருவதில்லை. 20 சதவீதம் கமிஷன் கொடுத்தால்தான் தொழிற்சாலைகள் இங்கு வரமுடியும். கடந்த பத்து ஆண்டுகளாக கம்பெனிகள் வருவதில்லை. தமிழக இளைஞர்கள் இன்னும் ஒரு வருடத்தில் கொந்தளிக்க ஆரம்பிப்பார்கள். 2024-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க.வுக்கு கன்னியாகுமரியில் ஒரு எம்.பி-யை நீங்கள் கொடுக்க வேண்டும். ஒரு சீட்டுக்கட்டில் ஒரு சீட்டை உருவினால் அது மொத்தமாக விழுவது போன்று, கன்னியாகுமரி மாவட்டத்தில் வெற்றியை கொடுத்தால் எல்லா இடங்களிலும் பா.ஜ.க. வெற்றிபெறும்.இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜ.க. எதிர்க்கும்

மத்திய அரசு கூறிய மாற்றுப்பாதை திட்டத்தை கொண்டு வந்தால் சேதுசமுத்திர திட்டத்தை நாங்கள் ஆதரிப்போம் என்று நயினார் நாகேந்திரன் பேசினார். அவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து பேசவில்லை. மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் ராமர் சேது பாலம் பாதிக்காத வகையில் சேதுசமுத்திர திட்டம் அமைக்கப்படும் என கூறவில்லை. அவ்வாறு அமைந்தால் திட்டத்தை பா.ஜனதா எதிர்க்கும்.

மத்திய அரசு சொன்ன பாதையில் சேதுசமுத்திர திட்டத்தை கொண்டு வந்தால், ஆதரிப்போம். சேதுசமுத்திர திட்டம் யாருக்கு லாபம்? என்பதற்கு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அப்போது பதிலளித்திருந்தார். டி.ஆர்.பாலு பெயரையும் அவரது கப்பல் நிறுவன பெயரையும், கனிமொழி பெயரையும் அவரது கப்பல் நிறுவன பெயரையும் சொல்லி அவர்களுக்குத்தான் பயன் என கூறியிருந்தார்.

கூவத்தை சுத்தப்படுத்திய கதை

சட்டமன்ற குழு கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வபெருந்தகை, தி.மு.க அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ராமாயணம் கற்பனை என அடிக்கடி கூறினர். இது மக்களின் மனதை புண்படுத்தி உள்ளது. இப்படிபட்டவர்கள் கன்னியாகுமரியில் முகமூடிபோட்டு சுற்றித்திரிகிறார்கள். அந்த முகமூடி சட்டசபையில் கிழிந்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி சொன்னார்.

கூவத்தை சுத்தப்படுத்திய கதை தான் சேதுசமுத்திர திட்டத்திற்கும் ஏற்படும். 2 நபர்கள் கொள்ளையடிக்கும் விதமாக இந்த திட்டத்தை கொண்டு வர துடிக்கிறார்கள். தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பொங்கல், தீபாவளி பண்டிகைகளுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்காதது கண்டிக்கத்தக்கது. மற்ற பண்டிகைக்கு விடுமுறை கொடுத்துள்ளார்கள். குமரி மாவட்ட வீட்டு வசதி கூட்டுறவு பணியாளர்களுக்கு நிலுவை தொகை வழங்கப்படாமல் உள்ளது. அந்த சம்பளத்தை பெற்றுக் கொடுக்க பா.ஜ.க நடவடிக்கை எடுக்கும்.

நெடுஞ்சாலை பணிகள் தாமதம்

தமிழகத்தில் எனக்கு எதிராக தொடர்ந்து சிலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எனவே இசட் பிரிவு பாதுகாப்பு தேவை என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்த காரணம் என்னவென்று நான் கேட்க விரும்பவில்லை.

தி.மு.க.வின் நோக்கம் தினமும் அண்ணாமலையை வம்புக்கு இழுப்பதுதான். சவாலுக்கான காலம் 2024, 2026-ல் வரும். அப்போது அண்ணாமலையை எதிர்த்து நிற்கட்டும். தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் தாமதமாகிறது. தமிழக அரசு ஜல்லி, மணல் கொடுப்பது இல்லை போன்ற பல பிரச்சினைகளால் பணியின் வேகத்தை குறைக்கிறார்கள். மத்திய மந்திரியாக டி.ஆர்.பாலு இருக்கும்போது போட்டிபோட்டு வேலை செய்வார்கள். மத்திய அரசு வேலையில் கமிஷன் அடிக்க வேண்டும் என்பதற்காக அப்படி செய்தார்கள். தி.மு.க வந்த பிறகு கனிமவள பிரச்சினைகளால் வேலைகள் தாமதம் ஆகிறது.

போராட்டத்தை தீவிரப்படுத்தும்

தி.மு.க ஆட்சிக்கு வந்து 20 மாதம் ஆகி விட்டது. ஆனால் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. 2400 செவிலியர்களுக்கு வேலை நிரந்தரம் செய்யவில்லை. அதற்காக அவர்களுடன் இணைந்து பா.ஜ.க.வும் போராடிக் கொண்டிருக்கிறது.

கனிமவள கொள்ளைக்கு எதிராக பா.ஜ.க மேலும் தீவிர போராட்டத்தை முன்னெடுக்கும். தி.மு.க.வுக்கு எப்போதுமே ஒரு எதிரி வேண்டும். தி.மு.க இப்போது கவர்னரை வில்லனாக காட்டி அரசியல் செய்கிறது. கவர்னரின் மாண்பை தி.மு.க அரசு கொடுத்து விட்டது. தி.மு.க தேவையில்லாமல் கவர்னரை சீண்டி பார்க்கிறது. கேரள, மேற்கு வங்காள கவர்னரை போல் தமிழக கவர்னரும் செயல்பட்டால் என்னவாகும்.

சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு கண்ணை காட்டியதற்கும், பொன்முடி கையை காட்டியதற்கும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க பிரச்சினை சுமூகமாக தீர்ந்துவிடும். எங்கள் கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி, மாவட்ட பா.ஜ.க தலைவர் தர்மராஜ், பா.ஜ.க. பொருளாதார பிரிவு மாவட்ட தலைவரும், மாநகராட்சி கவுன்சிலருமான அய்யப்பன், பா.ஜ.க. பொருளாதார பிரிவு மாவட்ட துணை தலைவர் ஜெயக்குமார், ஊடக பிரிவு மாநில செயலாளர் திருக்கடல் உதயம், டாக்டர் எஸ். ஆறுமுகம் பிள்ளை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story