கிராமப்புறங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு


கிராமப்புறங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு
x
தினத்தந்தி 19 Jun 2023 1:00 AM IST (Updated: 19 Jun 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

கிராமப்புறங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக பொள்ளாச்சியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சப்-கலெக்டரிடம், ஊராட்சி தலைவர்கள் புகார் தெரிவித்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

கிராமப்புறங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக பொள்ளாச்சியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சப்-கலெக்டரிடம், ஊராட்சி தலைவர்கள் புகார் தெரிவித்தனர்.

ஆலோசனை கூட்டம்

ஆழியாறு அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக அம்பராம்பாளையம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீரை சுத்திகரித்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளுக்கு பல்வேறு குடிநீர் திட்டங்களின் கீழ் வினியோகம் செய்கின்றனர்.

இந்த நிலையில் பொள்ளாச்சி வடக்கு, கிணத்துக்கடவு ஒன்றிய கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக பொள்ளாச்சியில் சப்-கலெக்டர் பிரியங்கா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

குடிநீர் பிரச்சினை

கூட்டத்தில் ஊராட்சி தலைவர்கள் பேசியதாவது:-

தேவராயபுரம் ஊராட்சி வேலாயுதபாளையம், சென்றாம்பாளையம் கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் இல்லை. பொதுமக்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்க முடியவில்லை. போளிகவுண்டன்பாளையத்தை அடுத்த கொல்லப்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு குடிநீர் செல்கிறது. ஆனால் அந்த ஊராட்சிக்கு தண்ணீர் வருவதில்லை. பொதுமக்கள் சுத்தமான குடிநீரை குடித்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. நேரில் வந்து ஆய்வு செய்தால் தெரியும். இதுபோன்று பல கிராமங்களில் குடிநீர் பிரச்சினை உள்ளது.

295 கிராமங்களுக்கான குடிநீர் திட்டத்தால் எந்த பயனும் இல்லை. மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப குடிநீர் வழங்க வேண்டும். இல்லையென்றால் குடிநீர் திட்டத்தை நிறுத்தி விடலாம்.

அம்பராம்பாளையம் நீரேற்று நிலையத்தில் கூடுதல் தண்ணீர் எடுக்க வசதி ஏற்படுத்த வேண்டும். நெடுஞ்சாலைத்துறையினர் சாலையோரத்தில் குடிநீர் குழாய்கள் செல்லும் பகுதியில் மரக்கன்றுகளை நடுகின்றனர். இதனால் நாளடைவில் வேர் ஊடுருவி குழாய் சேதமாக வாய்ப்பு உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

புதிய குழாய்கள்

குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறும்போது, மின் தடை, குழாய்களில் உடைப்பு காரணமாக சீரான குடிநீர் வழங்க முடியவில்லை. அம்பராம்பாளையத்தில் இருந்து ஆவல்சின்னாம்பாளையம் வரை கான்கீரிட் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழாய்கள் 20 சதவீத தண்ணீரை ஊறிஞ்சி கொள்கின்றன. புதிய குழாய்களை அமைத்த பிறகே பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றனர்.

சப்-கலெக்டர் பிரியங்கா கூறுகையில், புதிய குழாய்களை பதிக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சாலையோரங்களில் குழாய் பதிக்கும்போது, நெடுஞ்சாலைத்துறையினருடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.


Next Story