கழிவுநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்
சீர்காழி பழைய பஸ்நிலைய பகுதியில் கழிவுநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று நகர்மன்ற கூட்டத்தில் உறுப்பினர் வலியுறுத்தினார்.
சீர்காழி:
சீர்காழி பழைய பஸ்நிலைய பகுதியில் கழிவுநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று நகர்மன்ற கூட்டத்தில் உறுப்பினர் வலியுறுத்தினார்.
நகர்மன்ற கூட்டம்
சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரசபை தலைவர் துர்கா ராஜசேகரன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஹேமலதா, துணைத்தலைவர் சுப்பராயன், நகர அமைப்பு ஆய்வாளர் மரகதம், பொறியாளர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளம்நிலை உதவியாளர் ராஜ கணேஷ் மன்ற தீர்மானங்களை படித்தார்.
தொடர்ந்து மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக நடந்த வன் கொடுமைகளை கண்டித்தும், தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி பிரதிகளுக்கு மாதத்தொகை அறிவித்த தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை பாராட்டியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் உறுப்பினர்களிடையே நடந்த விவாதம் வருமாறு:-
மீண்டும் எதற்கு வாங்க வேண்டும்
சாமிநாதன்(தி.மு.க.):- சீர்காழி நகராட்சியில் ஏற்கனவே வாங்கிய கொசு மருந்து அடிக்கும் எந்திரம் எந்த நிலையில் உள்ளது. இதன் பராமரிக்கு பணியில் யார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் எதற்கு கொசு மருந்து அடிக்கும் எந்திரம் வாங்க வேண்டும் என்பது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும்.
ரமாமணி(அ.தி.மு.க.):- சீர்காழி நகர் பகுதியில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வள்ளி முத்து(தி.மு.க.):- வரும் காலம் மழைக்காலமாக இருப்பதால் கழிவுநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். பன்றி, கொசு உள்ளிட்டவைகளை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.
தூர்வாரும்பணி முழுமை பெறவில்லை
கஸ்தூரிபாய்(தி.மு.க.):- எனது வார்டு பகுதிகளில் இறைச்சி கழிவுகளை கொட்டுவதை நகராட்சி நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும். பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி முழுமை பெறாமல் உள்ளது.
ராஜசேகரன்(தே.மு.தி.க.):- சீர்காழி நகராட்சிக்கு சொந்தமான ஈசானிய தெருவில் உள்ள எரிவாயு தகன மேடையில் கடந்த மூன்று மாதங்களாக யார் பணி செய்து கொண்டு இருக்கிறார்கள் என்ற விவரங்களை தெரியப்படுத்த வேண்டும்.
பாஸ்கரன்(தி.மு.க.):- சீர்காழி நகராட்சியில் 27 நிரந்தர தூய்மை பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் எந்த பணிகளை செய்து வருகிறார்கள் என்ற விவரங்களை மன்றத்தில் தெரிவிக்க வேண்டும். பல்வேறு இடங்களில் சாக்கடை நீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.
ரம்யா(தி.மு.க.):- எனது பகுதியில் செயல்படாமல் உள்ள நான்கு மினி பம்பு செட் மோட்டார்களை சீரமைத்து தர வேண்டும். கூடுதலாக தெரு விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
கூடுதலாக குடிநீர் வசதி
முபாரக்அலி(தி.மு.க.):- பழைய பஸ் நிலையப்பகுதியில் கழிவுநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சிறு பாலத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிதாக மழைநீர் வடிகால் மீது பெரிய பாலம் அமைத்து தர வேண்டும்.
ரேணுகாதேவி(தி.மு.க.):- ராஜாஜி தெருவில் சேதமடைந்த நிலையில் உள்ள மினி பவர் பம்பு செட்டை சீரமைத்து தர வேண்டும்.
தேவதாஸ்(தி.மு.க.):- எனது பகுதியில் கூடுதலாக குடிநீர் வசதி அமைத்து தர வேண்டும். நித்யாதேவி(அ.தி.மு.க.):- சேதமடைந்த சாலைகளை சீரமைத்து தர வேண்டும். இவ்வாறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில் நகர உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.