பள்ளியில் தேங்கும் கழிவுநீர்


தினத்தந்தி 10 Jan 2023 12:15 AM IST (Updated: 10 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குழாயில் அடைப்பு ஏற்பட்டதால், பள்ளியில் கழிவுநீர் தேங்குகிறது இதனால் மாணவிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

குழாயில் அடைப்பு ஏற்பட்டதால், பள்ளியில் கழிவுநீர் தேங்குகிறது இதனால் மாணவிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நகர் பகுதி மட்டுமல்லாது கிராமப்புறங்களை சேர்ந்த மாணவிகள் பலரும் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கு எதிரே பொதுக்கழிப்பிடம் உள்ளது. இங்கிருந்து கழிவுநீர் செல்வதற்கு வசதியாக குழாய் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் வெளியேறி வருகிறது. இது சாலையில் தேங்கி நிற்பதோடு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் வாகனங்கள் சென்று வருவதால் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதற்கிடையில் கழிவுநீர் நேராக பள்ளி வளாகத்திற்குள் சென்று குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் மாணவிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

சுகாதார சீர்கேடு

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு எதிரே உள்ள பொதுக்கழிப்பிடத்தில் இருந்து கழிவுநீர் செல்வதற்கு குழாய் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதால் கழிவுநீர் வெளியேறி பள்ளிக்கு செல்கிறது. சாலையில் இருந்து கழிவுநீர் பள்ளி வளாகத்திற்குள் வழிந்தோடி சத்துணவு மையத்திற்கு செல்லும் வழியில் தேங்கி நிற்கிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் மாணவிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

தற்போது வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் பள்ளி வளாகத்தில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் தற்போது கழிவுநீர் வெளியேறுவது பாதாள சாக்கடைக்கு அமைக்கப்பட்ட குழாயா அல்லது கழிவுநீர் செல்லும் குழாயா என்பது தெரியவில்லை. எனவே நோய் தொற்று பரவும் முன் கழிவுநீர் வெளியேறுவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story