கழிவுநீர் பிரச்சினையால் கதி கலங்கும் மக்கள்


கழிவுநீர் பிரச்சினையால் கதி கலங்கும் மக்கள்
x

நாமக்கல் 19-வது வார்டில் கழிவுநீர் பிரச்சினையால் மக்கள் கதி கலங்கி வருகின்றனர். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

நாமக்கல்

19-வது வார்டு

நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இதில் 19-வது வார்டில் காமராஜ் நகர், மதுரைவீரன்புதூர், லட்சுமி நகர், கலைவாணர் நகர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கி உள்ளன. இந்த வார்டில் 2 ரேஷன்கடைகள் உள்ளன. தனியார் பள்ளி ஒன்றும் செயல்பட்டு வருகிறது.

இந்த வார்டு பெரியபட்டி ஊராட்சியில் இருந்து நகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதியாகும். இதனால் இங்கு பாதாள சாக்கடை திட்டம் இதுவரை அமல்படுத்தப்படவில்லை. எனவே அங்கு கழிவுநீர் பிரச்சினை இருந்து வருகிறது.

இந்த வார்டில் 1,253 ஆண்கள், 1,269 பெண்கள், ஒரு இதரர் என மொத்தம் 2,523 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கிருஷ்ணமூர்த்தி வெற்றிபெற்றார். நகராட்சியின் பிற வார்டுகளை போல இந்த வார்டிலும் தெருநாய்கள் தொல்லை இருந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டும். சாலை வசதியை மேம்படுத்த வேண்டும். அடிப்படை வசதிகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கழிவுநீர் பிரச்சினை

மதுரைவீரன்புதூர் பகுதியை சேர்ந்த மேனகா கூறியதாவது:-

எங்கள் வார்டில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அதை கட்டுப்படுத்தநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை வேண்டும். இதேபோல் மதுரைவீரன்புதூர் பகுதியில் இருந்து திருவள்ளுவர் நகர் வரைக்கும் கடந்த ஆட்சி காலத்தில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது. இதில் கழிவுநீர் தேங்கி பச்சைநிறமாக காட்சி அளிக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இந்த கழிவுநீர் பிரச்சினைக்கு அதிகாரிகள் உரிய தீர்வு காண வேண்டும்.

இதேபோல் மதுரைவீரன் கோவில் அருகில் அடிக்கடி விபத்து நடக்கிறது. இதை கட்டுப்படுத்த வேகத்தடை அல்லது ரவுண்டானா அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதாள சாக்கடை திட்டம்

லட்சுமி நகரை சேர்ந்த மூர்த்தி:-

எங்கள் பகுதி பெரியப்பட்டி ஊராட்சியில் இருந்து நகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதியாகும். ஆதலால் இதுவரை பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படவில்லை. எனவே கழிவுநீர் பிரச்சினை இருந்து வருகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பாதாள சாக்கடை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் காமராஜ் நகர் பகுதியிலும் பாதாள சாக்கடை அமைக்க வேண்டும்.

வாடகை கட்டிடத்தில் இயங்கும் ரேஷன்கடைக்கு லட்சுமி நகரில் பொது இடத்தில் சொந்த கட்டிடம் கட்டி தர வேண்டும். மதுரைவீரன் புதூர் பகுதியில் இருந்து திருச்செங்கோடு சாலை சந்திப்பு வரை மின்விளக்கு வசதி செய்து தர வேண்டும்.

மண் சாலைகள்

காமராஜ் நகர் சிவமுருகேசன்:-

கலைவாணர் நகரில் 40 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 1996-ம் ஆண்டு அரசு சார்பில் பட்டா வழங்கப்பட்டது. இதுவரை மதிப்பீடு போட்டு கொடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மதிப்பீடு போட்டு கொடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

காமராஜ் நகர் மற்றும் மதுரைவீரன் புதூரில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களுக்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டும். மண் சாலைகள் அனைத்தையும் தார்சாலையாக மாற்ற வேண்டும். தெருவிளக்கு இல்லாத பகுதிகளில் மின்விளக்கு வசதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story