கொள்ளிடம் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்


கொள்ளிடம் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்
x

கொள்ளிடம் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்று குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருச்சி

கொள்ளிடம் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்று குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதில் அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

சமூகநீதிபேரவை ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் தலைமையில் பொதுமக்கள் அளித்த மனுவில், " அல்லித்துறை ஊராட்சிக்குட்பட்ட சாந்தபுரம் அருகே ஆர்.எஸ்.எஸ்.காலனியில் வசித்து வரும் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு கடந்த 2003-ம் ஆண்டு தற்காலிகமாக பட்டா வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் அங்கு வீடு கட்டி, வீட்டு வரி, தண்ணீர் வரி செலுத்தி மின் இணைப்பு பெற்று வசித்து வருகிறார்கள். தற்போது அங்கு நிரந்தர பட்டா வழங்க வேண்டி பல ஆண்டுகளாக மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை. ஆகவே அவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறி இருந்தனர்.

வெள்ளாமை இயக்கத்தை சேர்ந்த தலைவர் ஜான் தலைமையில் எடத்தெரு பிள்ளைமாநகரை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், "திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ளாமை இயக்கத்தை சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு நிரந்தரமாக குடியிருக்க இடம் வழங்க வேண்டும்" என்று கூறி இருந்தனர்.

கொள்ளிடத்தில் கழிவுநீர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா தலைமையிலானோர் அளித்த மனுவில், "ஸ்ரீரங்கம் சோதனை சாவடி அழகிரிபுரத்தில் கொள்ளிடம் ஆற்றில் 20 ஆண்டுகளுக்கு மேலாக கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் சலவை தொழில் செய்யும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அந்த பகுதியில் குடிநீரும் குடிக்க முடியாத நிலையில் உள்ளது. ஆகவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறி இருந்தனர்.

மண்ணச்சநல்லூர் ஒன்றிய பள்ளி மேலாண்மைக்குழு சார்பில் அளித்த மனுவில், மண்ணச்சநல்லூர் ஒன்றியம், ச.கண்ணனூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவர்கள் அமர்ந்து கல்வி கற்பதற்கு போதுமான இடவசதி இல்லாததால் சிரமப்பட்டு வருகிறார்கள். கடந்த 2019-ம் ஆண்டு இப்பள்ளியில் 2 புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. அது போதுமானதாக இல்லாததால் கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்று கூறி இருந்தனர். இதேபோல் முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்பட பல்வேறு வகையில் 587 மனுக்கள் அளிக்கப்பட்டன.


Next Story