தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்; மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்


தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்; மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
x

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்று நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

திருநெல்வேலி

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்று நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

முதல்-அமைச்சருக்கு நன்றி

நெல்லை மாநகராட்சி சாதாரண மற்றும் அவசர கூட்டம் நேற்று நடைபெற்றது. மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டம் தொடங்கியதும் மேயர் சரவணன் பேசுகையில், ''அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கி உத்தரவிட்ட அரசுக்கும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வர்த்தக மையம், பேட்டையில் சரக்கு வாகன முனையம், நேருஜி கலையரங்கம், பசுமை பூங்கா உள்ளிட் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்'' என்றார்.

ஆற்றில் சாக்கடை கலப்பு

சுகாதார குழு தலைவர் ரம்ஜான் அலி பேசுகையில், ''நெல்லை மாநகராட்சியில் வரி வசூலை அதிகம் தருகிற மண்டலமாக மேலப்பாளையம் உள்ளது. ஆனால் இந்த மண்டலத்தில் பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை. அதனால் பாளையங்கால்வாயில் கழிவுநீர் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அதை சரி செய்ய வேண்டும்'' என்றார்.

சங்கரகுமார் பேசுகையில், ''தச்சநல்லூர் கழிவு நீரேற்று நிலையத்தில் இருந்து கழிவுகள் வெளியேறி தாமிரபரணி ஆற்றில் அதிகளவு கலக்கிறது'' என்றார்

தச்சை சுப்பிரமணியன் பேசுகையில், ''உடையார்பட்டி பகுதியில் இருந்தும் பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. அதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

3-வது கட்ட பாதாள சாக்கடை

பாளையங்கோட்டை மண்டல தலைவர் பிரான்சிஸ் பேசுகையில், ''நெல்லை மாநகராட்சியில் 3-வதுகட்ட பாதாள சாக்கடை திட்டம் எந்த நிலையில் உள்ளது. அதற்கான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.

கோகுலவாணி சுரேஷ் பேசுகையில், 12-வது வார்டில் உடையார்பட்டி முதல் சிந்துபூந்துறை வரையில் சாலையை தோண்டி போட்டு 5 மாதங்களாக போடாமல் கிடக்கிறது. பேவர் பிளாக் சாலை அமைப்பதாக கூறினார்கள். அது சாத்தியமில்லாவிட்டால் உடனடியாக தார் சாலையாவது போட வேண்டும்'' என்றார்.

கல்விக்குழு தலைவர் பவுல்ராஜ் பேசுகையில், மாநகராட்சி பள்ளிகள் மேம்பாட்டுக்கு ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சாந்திநகர் மணிக்கூண்டு பகுதியில் பாதாள சாக்கடை உடைந்து கால்வாயில் ஓடுகிறது. அதை சரி செய்ய வேண்டும்'' என்றார். சின்னத்தாய் பேசுகையில், ''பாளையங்கோட்டை ரெயில் நகர், லலிதா நகர் உள்ளிட்ட பகுதியில் அரியநாகிபுரம் கூட்டு குடிநீர் திட்ட குழாய்களில் கசிவு ஏற்பட்டு உள்ளது. அண்ணா நகரில் 400 குடியிருப்புகளுக்கு குடிநீர் கிடைக்கவில்லை'' என்றார்.

ரசூல் மைதீன் பேசுகையில், ''மேலப்பாளையம் கன்னிமார் குளத்தில் கழிவுநீர் கலக்கிறது. மேலும் மேலப்பாளையம் வழியாக ஓடும் பாளையங்கால்வாயில் ஒட்டுமொத்த கழிவுநீரும் கலந்து சென்னை கூவம் நதி போல் காட்சி அளிக்கிறது. நான் சிறுவனாக இருந்த போது பாளையங்கால்வாயில் குளித்து மகிழ்ந்துள்ளேன்'' என்றார்.

உலகநாதன் பேசுகையில், ''ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததற்கு கடந்த அ.தி.மு.க. அரசும், சில அதிகாரிகளும் தான் காரணம். எனவே அனைத்து ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்'' என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கவுன்சிலர் முத்து சுப்பிரமணியன் பேசுகையில், மல்லிகா தெருவில் சாலைகளை சீரமைத்து தரவண்டும். கோடை காலத்தில் பழுதடைந்த அடிபம்புகளை உடனுக்குடன் சீரமைத்து பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்றார்.

முகைதீன் அப்துல் காதர் பேசுகையில், மேலப்பாளையம் மண்டலத்துக்கு உதவி ஆணையாளர், உதவி செயற்பொறியாளர்களை உடனே நியமிக்க வேண்டும்'' என்றார்.

கழிவுநீர் கலப்பை தடுக்க குழு

இதேபோல் கவுன்சிலர்கள் தங்களது வார்டு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்கள். கவுன்சிலர்களின் கேள்விக்கு மேயர் மற்றும் அதிகாரிகள் பதில் அளித்தார்கள். மேயர் பேசுகையில் ''பாளையங்கால்வாயை தூர்வாரி சீரமைக்க பொதுப்பணித்துறைக்கு கடிதம் எழுதப்படும். தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க குழு அமைக்கப்படும்'' என்றார். மேலும் கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகளை உடனே முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் மாகநராட்சி சார்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. 2 மாதங்களுக்கு பிறகு நேற்றைய மாநகராட்சி கூட்டம் சுமுகமாக நடைபெற்றது.


Next Story