பாதாள சாக்கடை திட்ட மேலாண்மை பயிற்சி


பாதாள சாக்கடை திட்ட மேலாண்மை பயிற்சி
x

வேலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட மேலாண்மை பயிற்சி மேயர் தலைமையில் நடந்தது.

வேலூர்

ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் வேலூர் மாநகராட்சி சார்பில் வருவாய் அல்லாத நீர், பாதாள சாக்கடை திட்ட மேலாண்மை மற்றும் தொழில்நுட்பங்கள் தொடர்பான பயிற்சி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. பயிற்சிக்கு மேயர் சுஜாதா தலைமை தாங்கினார். துணைமேயர் சுனில்குமார் முன்னிலை வகித்தார். பயிற்சி ஒருங்கிணைப்பாளர் லூர்துராஜ் வரவேற்றார். இதில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் அசிம்குமார் பட்டாசாரியா, பவன்ஷா ஆகியோர் கலந்து கொண்டு மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் இருந்து வீடுகளுக்கு செல்லும் குடிநீர் வீணாவதை தடுப்பது மற்றும் வீடுகளில் இருந்து கழிநீர் கால்வாயில் கலப்பதால் ஏற்படும் நோய்கள் மற்றும் அதனை முறைப்படுத்துவது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பாக வீடியோ காட்சிகளுடன் பயிற்சி அளித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், குழாய்களில் திடீரென ஏற்படும் உடைப்பு காரணமாக குடிநீர் வீணாவதை தடுக்க பல நகரங்களில் சென்சார் கருவி அமைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று இங்கும் கொண்டு வருவதற்கான சாத்தியகூறுகள் மற்றும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது மீத்தேன் வாயு தாக்கி உயிரிழப்பதை தடுக்க பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர் என்றனர்.

இதில், குடிநீர்வடிகால் வாரிய பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள், மாநகராட்சி குடிநீர் திட்ட மேம்பாட்டு பிரிவு பொறியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பாதாள சாக்கடை திட்டக்குழு தலைவர் தினகரன் நன்றி கூறினார்.


Next Story