பாதாள சாக்கடை பணிகளை செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் - ஒப்பந்ததாரர்களுக்கு ஆணையாளர் உத்தரவு


பாதாள சாக்கடை பணிகளை செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் - ஒப்பந்ததாரர்களுக்கு ஆணையாளர் உத்தரவு
x
தினத்தந்தி 3 July 2023 7:51 PM GMT (Updated: 4 July 2023 12:01 PM GMT)

திருச்சி மாநகரில் பாதாள சாக்கடை பணிகளை செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி

திருச்சி,

திருச்சி மாநகரில் பாதாள சாக்கடை பணிகளை செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

ஆலோசனை கூட்டம்

திருச்சி மாநகராட்சியில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் பாதாள சாக்கடை பணிகள் மிகவும் தொய்வாக நடைபெறுவதாக மாநகராட்சி கவுன்சிலர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அப்போது, மாநகராட்சி ஒப்பந்ததாரர்களை அழைத்து பேசி எப்போது பணிகள் முடிக்கப்படும் என்று உறுதிமொழி வாங்கப்படும் என்று மேயர் அன்பழகன் உறுதி அளித்தார். அதன்படி, பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களுடனான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஆணையாளர் வைத்திநாதன், துணைமேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநகர பொறியாளர் சிவபாதம், மண்டல தலைவர்கள் துர்காதேவி, விஜயலட்சுமி, ஆண்டாள், ஜெயாநிர்மலா மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், ஒப்பந்ததாரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து ஒப்பந்ததாரர்களுடன் விவாதிக்கப்பட்டது.

82 சதவீதம் நிறைவு

அப்போது அம்ரூத் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும் பாதாள சாக்கடை திட்டம் பகுதி2-ல் ரூ.377 கோடியே 29 லட்சத்தில் 3 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதில் 284.464 கி.மீ. நீளம் கழிவுநீர் குழாய்களில் 276.168 கி.மீ கழிவுநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளன. இதில் 44 ஆயிரத்து 569 பாதாள சாக்கடை இணைப்புகளில் 37 ஆயிரத்து 338 எண்கள் பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 82 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. அதுபோல் பாதாள சாக்கடை திட்டம் பகுதி3-ல் ரூ.330.31 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தில், 293 கி.மீ. நீளம் கழிவுநீர் குழாய்களில் 233 கி.மீ. கழிவுநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளன. இதில் 32 ஆயிரம் பாதாள சாக்கடை இணைப்புகளில் 24 ஆயிரம் பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த தொகுப்பில் 72½ சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன.

செப்டம்பர் மாதம் வரை கெடு

மேலும் திருச்சி மாநகராட்சி சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ், 27 வார்டுகளில் கழிவுநீர் குழாய் புனரமைக்கும் பணிக்கு ரூ.210 கோடி மதிப்பீட்டில் 3 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தில், 174 கி.மீ. நீளம் கழிவுநீர் குழாய்களில் 135 கி.மீ. கழிவுநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளன. 43 ஆயிரத்து 938 பாதாள சாக்கடை இணைப்புகளில் 15 ஆயிரத்து 884 பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த தொகுப்பில் 74 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளதாக ஒப்பந்ததாரர்கள் தெரிவித்தனர்.

இதனால் மீதம் உள்ள பணிகளை வருகிற செப்டம்பர் மாதத்துக்குள் முடித்துக்கொடுக்க ஒப்பந்ததாரர்களுக்கு ஆணையாளர் உத்தரவிட்டார். அத்துடன், குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளில் 4 கி.மீ. மட்டுமே பாக்கி உள்ளது. குடிநீரேற்று குழாய்கள் 12 கி.மீ. தூரம் பதிக்க வேண்டியுள்ளது. இவற்றை இந்த மாத இறுதிக்குள் முடிக்கும்படி ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.


Next Story