திருப்பரங்குன்றம் ரெயில்வே சுரங்கப்பாதையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும்- குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்
திருப்பரங்குன்றம் ரெயில்வே சுரங்கப் பாதையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் ரெயில்வே சுரங்கப் பாதையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
குறைதீர்க்கும் கூட்டம்
திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தாசில்தார் அனீஸ் சத்தார் தலைமை தாங்கினார். தலைமையிடத்து துணை தாசில்தார் புவனேஸ்வரி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் குமரேசன், விவசாய தொழிலாளர் அணிமாநில துணைச் செயலாளர் சேதுராமன்:
பெரிய ஆலங்குளத்தில் இருந்து திருப்பரங்குன்றம் பிரதான சாலை பிரிந்து செல்லும் வழியில் உள்ள சுமார் 400 ஏக்கர் நிலங்களுக்கு விவசாயிகள் நடந்து சென்று வருவதற்கு கூட சரியான பாதை இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆகவே பெரிய ஆலங்குளம் கண்மாய்க்கு நடுவில் பாலம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
தக்காளி நாத்து
மாடக்குளம் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் மாரிச்சாமி: தண்ணீர் இல்லை என்றால் நட்ட செடிகள் பட்டுப் போய்விடும். அதில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவர். பெரிய ஆலங்குளம் கண்மாயில் தண்ணீர் வந்து விட்டால் நிலத்திற்கு விவசாயிகள் நடந்து செல்ல சரியான வழி இல்லை.
தென்பழஞ்சி சிவராமன்: தக்காளி நாத்துகள் நடப்பாண்டில் தரப்படவில்லையே?
தோட்டக்கலைத்துறை அலுவலர்: மல்லிகை நாத்துதான் வந்துள்ளது.
முல்லை பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் ராமன்:
தோட்டக்கலைதுறை உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று கடந்த ஆண்டுகளைப் போலவே இலவசமாக விவசாயிகளுக்கு கத்தரி, தக்காளி நாத்து வழங்க வேண்டும். அப்போதுதான் சமீபத்தில் ஏற்பட்ட தக்காளி தட்டுப்பாடு வராது. மதுரை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அரசு அறிவிப்பதற்கு திருப்பரங்குன்றம் தாலுகா வட்டாட்சியர் வழியாக கலெக்டர் மூலம் அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
தகவல் தெரிவிப்பது இல்லை
அப்துல்கலாம் அறிவியல் விவசாய மக்கள் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் அபேல் மூர்த்தி: இடத்திற்கு நான்கு மால்க ாட்டும் போது தகவல் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. அதேசமயம் இடத்தை சப்-டிவிசன் செய்யும் போது தகவல் தெரிவிப்பதில்லை. அதனால் வி.ஏ.ஒ. மற்றும் சர்வேயர் சரிவரபார்க்காமல் 5 செண்ட் பத்திரத்திற்கு 8 செண்ட் பட்டா வழங்குகிறார்கள். வருங்காலங்களில் சப்-டிவிசனுக்கும் தகவல் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். திருப்பரங்குன்றம் ரெயில்வே சுரங்கப்பாதையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் பெரிய ஆலங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையா, விவசாயி சங்க பொறுப்பாளர்கள் லட்சுமணன், மகேந்திரன், அழகுதேவன், தென்பழஞ்சி பாண்டி, பிரகாஷ் உள்பட பலர்கலந்து கொண்டனர்.