8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
பாலியல் தொல்லை
சத்தியமங்கலம் அருகே உள்ள புதுக்குய்யனூர் ஆதிதிராவிடர் காலனி பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 13-ந் தேதி புதுக்குய்யனூரில் அவர் குடியிருக்கும் பகுதியில் திருமண விழா ஒன்று நடந்தது. இந்த கிராமத்தில் திருமணம் போன்ற விழாக்கள் நடந்தால் கிராமத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து கொண்டாடுவது வழக்கம்.
இதனால் அன்றைய தினம் முருகன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். ஊரில் உள்ள அனைவரும் திருமண வீட்டில் ஒன்றாக கூடி இருந்தனர். அப்போது மதியம் 2 மணி அளவில் முருகனின் வீட்டையொட்டிய காட்டுப்பகுதிக்கு 8 வயது சிறுமி ஒருவர் தனியாக சென்றார். சிறுமியை பார்த்த முருகனுக்கு பாலியல் எண்ணங்கள் எழுந்தன. அப்போது ஊரில் யாரும் அங்கு வரமாட்டார்கள் என்று நினைத்த அவர், சிறுமிக்கு தெரியாமல் அவளை பின்தொடர்ந்து சென்றார். மறைவான இடத்துக்கு சென்றதும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
5 ஆண்டு சிறை
அந்த நேரத்தில் அங்கு வேறு ஒரு பெண் வந்தார். அவர் முருகன் சிறுமியிடம் அத்துமீறுவதை பார்த்து சத்தமிட்டார். உடனடியாக முருகன் அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உடனடியாக முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் ஈரோடு மகளிர் கோர்ட்டிலும் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மாலதி நேற்று தீர்ப்பு கூறினார்.
அதில் குற்றம்சாட்டப்பட்ட முருகனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராத தொகை செலுத்த தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும் நீதிபதி அந்த தீர்ப்பில் கூறி இருந்தார். அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி ஆர்.மாலதி பரிந்துரை செய்தார்.
இந்த வழக்கில் அரசு வக்கீல் எம்.ஜெயந்தி ஆஜர் ஆனார்.