திருச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: கைதான போலீசார் மேலும் ஒரு ஜோடியிடம் வம்பிழுத்தது அம்பலம்


திருச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: கைதான போலீசார் மேலும் ஒரு ஜோடியிடம் வம்பிழுத்தது அம்பலம்
x

திருச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை சம்பவத்தில் கைதான போலீசார் மேலும் ஒரு ஜோடியிடம் வம்பிழுத்தது அம்பலமாகியுள்ளது.

திருச்சி

காதல் ஜோடி

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் திருப்பூரை சேர்ந்த சசிகுமார் (வயது 28). புதுக்கோட்டை மாவட்டம், ராஜகோபாலபுரத்தை சேர்ந்த சங்கர் ராஜபாண்டியன் (32) திருவெறும்பூர் நெடுஞ்சாலை ரோந்து வாகனத்திலும், கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த பிரசாத் (26) நவல்பட்டு போலீஸ் நிலையத்திலும், சித்தார்த்தன் (30) ஜீயபுரம் போக்குவரத்து போலீஸ் நிலையத்திலும் போலீசாராக பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 4-ந்தேதி இவர்கள் 4 பேரும் முக்கொம்பு சுற்றுலாத்தலத்திற்கு சாதாரண உடையில் காரில் சென்றுள்ளனர். அங்கு 4 பேரும் மது அருந்திவிட்டு காவிரி ஆற்றில் குளித்துள்ளனர். பின்னர் மது போதையில் முக்கொம்பு பூங்காவை சுற்றி வந்த அவர்கள், அங்கு தனிமையில் உட்கார்ந்து இருந்த காதல் ஜோடியை வம்புக்கு இழுத்துள்ளனர்.

பாலியல் சீண்டல்

அப்போது, முக்கொம்பு புறக்காவல் நிலையத்தின் பின்புறம் உள்ள பூங்காவில் காதல் ஜோடியான அரியமங்கலத்தை சேர்ந்த 17 வயது சிறுமியும், துவாக்குடியை சேர்ந்த 19 வயது இளைஞரும் இந்த போலீசாரிடம் மாட்டிக்கொண்டனர். தனிமையில் இருந்த அவர்களை மிரட்டி, அடித்து கஞ்சா விற்பனை செய்கிறீர்களா? என்றும், உங்களை விசாரணை செய்ய வேண்டும் என்று கூறி, அந்த இளைஞரை போலீஸ்காரர் பிரசாத், சித்தார்த்தன் ஆகியோர் அடித்து விரட்டி உள்ளனர். பின்னர் சிறுமியை வலுக்கட்டாயமாக மிரட்டி காரில் ஏற்றி, சுமார் 1 மணி நேரம் வரை போதையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அவற்றை வீடியோ எடுத்து வைத்ததுடன், சிறுமியின் செல்போன் எண்ணை பெற்றுக்கொண்டு எப்போது அழைத்தாலும் பேசவேண்டும். கூப்பிடும் இடத்துக்கு வரவேண்டும் என்று சசிகுமாரும், சங்கர் ராஜபாண்டியனும் மிரட்டியுள்ளனர். அப்போது சிறுமி சத்தம் போடவே காரில் இருந்து சிறுமியை இறக்கி விட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சிறுமி அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் உள்பட 4 பேர் மீதும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். பின்னர் 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அத்துடன் 4 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

திருச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை:

கைதான போலீசார் மேலும் ஒரு ஜோடியிடம் வம்பிழுத்தது அம்பலம்

இந்தநிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரித்த போதுதான், கைதான 4 பேரும் எந்தவித அனுமதியோ, விடுப்போ பெறாமல், உயர் அதிகாரிகளுக்கு தகவல் செல்லாமல் ஒரு காரில் முக்கொம்புக்கு வந்துள்ளனர். அவர்கள் அங்கு மது அருந்திவிட்டு, ஆற்றில் குளித்தபிறகு போதை தலைக்கேறிய நிலையில் அங்கு தனிமையில் இருந்த காதல் ஜோடிகளிடம் வம்பு இழுத்ததும் தெரியவந்தது.

கடந்த 4-ந்தேதி இவர்கள் 2 ஜோடிகளிடம் வம்பு இழுத்ததும், அதில் ஒரு ஜோடி தப்பிச்சென்றதும் தெரியவந்துள்ளது. மேலும், இவர்கள் 4 பேரும் இதேபோல் எத்தனை முறை முக்கொம்புக்கு வந்து காதல் ஜோடிகளிடம் அத்துமீறியுள்ளனர் என்றும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story